கொலை செய்தாலும் மக்களுக்காக கதைப்பதை அடியாட்களால் தடுக்க முடியாது : சந்திம வீரக்கொடி கண்டனம்
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் இராணுவத்தின் ஆட்குறைப்பு தொடர்பாக தாம் கருத்து வெளியிட்ட போது, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி ஜெப்ரினன், ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோர் தம்மை அச்சுறுத்தும் வகையில் எதிர்வினையாற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
இன்று(06) நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
கருத்து தெரிவிக்க மறுப்பு
“நாடாளுமன்றத்தில் என்னால், இராணுவ உயர் அதிகாரிகளின் வாகன பயன்பாடு தொடர்பாக நான் வெளியிட்ட கருத்து குறித்து நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வை குழுவின் கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரால் எனக்கு எதிராக அச்சுறுத்தும் வகையிலான எதிர்வினை ஆற்றப்பட்டது.

செயற்குழு கூட்டத்திலும், நாடாளுமன்றத்திலும் தாக்குதல் நடத்துவதற்கும் தயார் நிலையில் உள்ளது போன்றதான எதிர்வினையை பாதுகாப்பு செயலாளர் ஆற்றினார்.
முப்படையினரை குறைப்பது தொடர்பான யோசனை குறித்து நான் கருத்து வெளியிட்ட போது, சாதராண சிப்பாய்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பதிலாக இராணுவத்தின் உயர்மட்டத்திலுள்ள தேவையற்ற செலவீனங்களை மட்டுப்படுத்துவதன் ஊடாக பாதுகாப்பு செலவீனங்களை குறைப்பதே பொருத்தமானது என நான் குறிப்பிட்டேன்.
அந்த தருணத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வை குழுவின் தலைவரால் எனக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது.
பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரால் தொடர்ச்சியாக எனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலேயே பதில் வழங்கப்பட்டது.
நாடாளுமன்ற சிறப்புரிமையின் பிராகாரம், நாடாளுமன்றத்திற்குள் நடைபெறும் சந்திப்புக்களில் கருத்து வெளியிடுவது தொடர்பாக எந்தவொரு நபருக்கும் அச்சுறுத்த முடியாது.
நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல்
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் என்ற வகையிலும் குழுவில் கருத்து வெளியிட்ட போது, வெளிநபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையானது எனது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாகும்.

இது தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
அதேபோன்று பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பாதுகாக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன். இது தொடர்பாக முறையிடுவதற்காக நான் கோரிய போது, செயற்குழுவின் தலைவர் சரத் வீரசேகர, அவ்வாறான முறைப்பாட்டை தாம் செய்ய முடியாது என குறிப்பிட்டார்.அதற்கு இடமளிக்க மாட்டேன் என கூறினார்.
இந்த விடயத்தை உடனடியாக நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு கொண்டுவந்து, உச்ச நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை வழங்க வேண்டும். எமது அரசியலமைப்பில் அதற்கான இடம் உள்ளது.
அச்சுறுத்திய இராணுவ தளபதி அரசியல் பதவி நீடிப்பு பெற்றுக்கொண்டுள்ள ஒருவர். இவர்களுக்கு இவ்வாறு செயற்பட இடமளிக்க முடியாது. எமது பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.
கொலை செய்தாலும் மக்களுக்காக கதைப்பதை தடுப்பதற்கு இந்த அடியாட்களால் முடியாது என்பதை நான் தெளிவுபடுத்துகின்றேன். அவர் ஒரு அரச ஊழியர் அல்ல. அவர் ஒரு அரசியல் அடியாளாகவே பதவிக்கு வந்தார்.” என்றார்.