அமைச்சரவையில் திடீர் மாற்றம்: சற்றுமுன் வெளியான அறிவிப்பு! (புதிய இணைப்பு)
புதிய இணைப்பு
விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் சற்று முன்னர் அதிபர் செயலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரமேஷ் பத்திரன, கைத்தொழில் அமைச்சராக அவரது இலாகாவுக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிதி இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக தோட்டத் தொழில் முயற்சிகள் அமைச்சரவை அல்லாத அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
முதலாம் இணைப்பு
சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து கெஹலிய ரம்புக்வெல்லவை பதவிநீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அந்த பதவிக்கு வைத்தியர் ரமேஷ் பத்திரனவை இன்று (23) சுகாதார அமைச்சராக நியமிப்பதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊழல்கள் இடம்பெற்றதாக
தற்போது கைத்தொழில் அமைச்சராக பதவி வகிக்கும் ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராக பதவியேற்றால் அவரை தற்போதுள்ள பதவியிலிருந்து நீக்குவதா அல்லது அவர் தொடர்ந்து அதே பதவியில் செயற்பட அனுமதிப்பதா என்பது குறித்து அதிபர் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்றும் அதிபர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது சுகாதார அமைச்சில் மோசடிகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றதாக பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றம் சுமத்தப்பட்டு, அண்மையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.