எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டால் ஏனைய சேவைகளுக்கான அறவீடுகளும் அதிகரிக்கும் - திஸ்ஸ அத்தநாயக்க
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டால், அதற்கு இணையாக சமையல் எரிவாயு, போக்குவரத்து, மின்சாரம், உணவு பொருட்களின் விலைகள், ஏனைய சேவைகளுக்கான அறவீடுகளும் அதிகரிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளா்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
"அடுத்த இரண்டு வாரங்களுக்குள் உலகில் ஒரு லீற்றர் எரிபொருளுக்கு அறவிடப்படும் அதிகமான விலை இலங்கையில் அறிவிக்கப்படும்.
அன்று நல்லாட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்தை வீசி எறிந்து விட்டு, மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதாக கூறிய தற்போதைய அரசாங்கத்தினர், ஏற்பட்டுள்ள நெருக்கடியில் எரிபொருள் விலை சூத்திரத்தை மீண்டும் கொண்டு வரும் யோசனையை முன்வைத்துள்ளனர்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது விலையை அதிகரிக்கவும் குறையும் போது விலையை குறைக்கும் நோக்கில் அன்றைய அமைச்சர் மங்கள சமரவீர இந்த விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தினர்.எனினும் அது தேவையில்லை என தற்போதைய அரசாங்கத்தினர் கூறினர்.
அத்துடன் கொரோனாவின் ஆரம்ப காலத்தில் உலக சந்தையில் எரிபொருள் விலையின் வீழ்ச்சியின் பலனை மக்களுக்கு வழங்காது, வரியை அறவிட்ட அரசாங்கம், தற்போது உலக சந்தையில் எரிபொருள் விலை உச்சத்திற்கு வந்துள்ள சந்தர்ப்பத்தில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டும் எனக் கூறுகிறது." என தெரிவித்துள்ளா்.
