அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட அறுவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா (Anura Priyadharshana Yapa) மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 6 பேருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வெள்ள நிவாரணம் வழங்குவதாக கூறி 61 மில்லியன் ரூபா பணத்தை முறைக்கேடான விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நேற்று (01)குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்துக்காக ஒதுக்கப்பட்ட 6.1 மில்லியன் ரூபாவை முறைகேடான விதத்தில் பயன்படுத்தியதாக அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவிக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளிக்கப்பட்டது.
பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
பிங்கிரிய மற்றும் நரம்மல ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக 61 இலட்சத்து 46 ஆயிரத்து 110 ரூபாய் நிதியை பெற்றுக் கொண்டுள்ளனர்.
எனினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதை வழங்காது 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக அந்நிதியை பயன்படுத்தியதாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே மேற்படி குற்றச்சாட்டின் பேரில் 2025 ஜனவரி 23 ஆம் திகதி அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் அன்றைய தினம் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.
சட்டமா அதிபர்
இந்த நிலையில் மேற்படி மோசடி தொடர்பில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கை நேற்று சட்டமா அதிபரினால் உயர் நீதிமன்ற நீதியரசர் உதேஷ் ரணதுங்க முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கமைய திருத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் பிரதான சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனுர பிரியதர்ஷன யாப்பாவின் ஒருங்கிணைப்பு செயலாளராக கடமையாற்றிய அனுர செனவிரத்ன எனும் நபரும் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அவர்களிடம் சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி அன்று மீண்டும் வழக்கு விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்ற நீதியரசர் உதேஷ் ரணதுங்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
