வெலிகம W15 ஹோட்டல் துப்பாக்கிச் சூடு! தேசபந்து உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை
கடந்த 2023-ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக மாத்தறை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
2023 டிசம்பர் 30 அன்று இரவு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 8 அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசேட நடவடிக்கையொன்றுக்காக வானில் வெலிகம பகுதிக்குச் சென்று இந்தத் துப்பாக்கிச் சூட்டைச் நடத்தினர்.
அதன்போது, இவர்களுடன் சென்ற காவல்துறை சார்ஜன்ட் உபுல் சமிந்த குமார, வெலிகம காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தார்.
08 சந்தேகநபர்கள்
இச்சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரைக் கைது செய்து சந்தேகநபர்களாகப் பெயரிடுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

இதன்படி தேசபந்து தென்னகோன், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அன்றைய பொறுப்பதிகாரி அன்ஸலம் டி சில்வா, காவல்துறை பரிசோதகர்களான மகேஷ் தனுசிங்க, ஜகத் நிஷாந்த, உப பொலிஸ் பரிசோதகர் ரொஷான் மதுரங்க, பொலிஸ் சார்ஜன்ட் பிரசன்ன குமார, காவல்துறை கொன்ஸ்டபிள்களான சுபுன் பிரியஷான் மற்றும் சாரதி கிஹான் பியதிஸ்ஸ ஆகியோர் முதற்கட்டமாகச் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டனர்.
பின்னர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளராகச் செயற்பட்ட உதவி காவல்துறை அத்தியாட்சகர் நெவில் சில்வாவும் நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து, இவ்வழக்கின் 9 ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.
காவல்துறை மா அதிபர் பதவி
இந்தத் துப்பாக்கிச் சூடு, நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்து தலைமறைவாக இருந்தமை மற்றும் 2022 மே 9 வன்முறைகளைத் தடுக்கத் தவறியமை உள்ளிட்ட 23 குற்றச்சாட்டுகள் குறித்து சபாநாயகரால் நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தியது.

இதில் 19 குற்றச்சாட்டுகளில் தேசபந்து தென்னகோன் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் 177 ஆதரவு வாக்குகளுடன், 2025 ஓகஸ்ட் 5 அன்று அவர் காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டார்.
அனுமதியின்றி அதிகாரிகளை வெலிகமவுக்கு அனுப்பி துப்பாக்கிச் சூடு நடத்தச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் விசாரணைகளைத் திசைதிருப்ப முயன்றமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காகத் தேசபந்து தென்னகோன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |