சுகாதார அமைச்சின் அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு
சுகாதார அமைச்சின் (Health Ministry) உயிரியல் மருத்துவ பொறியியல் சேவை பிரிவில் கடமையாற்றிய உயிரியல் மருத்துவ பொறியியலாளர் ஒருவருக்கு எதிராக கொழும்பு (Colombo) மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2015 ஆம் ஆண்டு 35 சத்திரசிகிச்சை அறை விளக்குகளை கொள்வனவு செய்யும் போது அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக குறிப்பிட்டு இந்த குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை கொழும்பு (Colombo) மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று கையளிக்கப்பட்டது.
சரீரப் பிணையில் செல்ல அனுமதி
அதன் பின்னர், குற்றம் சாட்டப்பட்டவரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணை முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவரின் வெளிநாட்டுப் பயணத்தைத் தடை செய்த நீதிமன்றம், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பிரதிவாதிக்கு ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என மற்றுமொரு பிணை நிபந்தனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |