சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு நாளை.!
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு நாளைய தினம் செவ்வாய்க்கிழமை(28) நடைபெறவுள்ளது.
குறித்த உப தவிசாளர் தெரிவினை நடத்த இடைக்கால தடை விதிக்குமாறு வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் முன்னாள் உப தவிசாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் கோரிக்கையை மன்று நிராகரித்ததை அடுத்து, நாளைய தினம் உப தவிசாளர் தெரிவு திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது.
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் முன்னாள் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர், சபையில் ஆற்றிய உரைக்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்த எழுத்தாணை மனு, வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் இன்றையதினம்(27) திங்கட்கிழமை எழுத்து மூல சமர்ப்பணங்களுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
வர்த்தமானிஅறிவித்தல்
இதன்போது, மனுதாரரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நாளைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் தெரிவை, இவ்வழக்கின் தீர்ப்பு வரும் வரை நடாத்த வேண்டாம் எனக் கட்டளையிடுமாறு மன்றிலே கோரப்பட்டது.

அதன் போது, முதலாம் இரண்டாம் எதிர்மனுதாரர்களான ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் சார்பாக மன்றில் தோன்றிய அரச சட்டவாதி, உப தவிசாளர் தெரிவு நாளைய தினம் நடைபெறும் என வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அரச செலவிலே வர்த்தமானி அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளமையால், அதனை நிறுத்த முடியாது என வாதிட்டார்.
இரு தரப்பின் வாதங்களை அடுத்து , உபதவிசாளர் தெரிவுக்கு தடைவிதிக்க மன்று மறுத்தமையால், நாளைய தினம் திட்டமிட்டபடி உப தவிசாளர் தெரிவு நடைபெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |