கொடூரமாக புதைக்கப்பட்ட குழந்தைகள் : உலகை திரும்பி பார்க்க வைத்த செம்மணி புதைகுழி
யாழ்ப்பாணம் (Jaffna) - செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கின்றதாக அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் ஆறுதிருமுருகன் தெரிவித்துள்ளார்.
இந்த புதைகுழி தொடர்பான விசாரணை ஒரு சர்வதேச விசாரணையாகி எம் மண்ணில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக தீர்க்கமான ஒரு நிலைப்பாட்டிற்கு உலகம் வரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நூறுக்கு மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், ”யாழ்ப்பாணம் - செம்மணி புதைகுழி தொடர்பாக தமிழ் சமூகம் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றது. சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நூறுக்கு மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது.
எத்தனை பேரை இழந்து எத்தனை பேர் காணாமல் போன சூழலில் கவலையோடு இருக்கின்ற போது இந்த புதைகுழி அதிர்ச்சியையும் மிகுந்த துயரத்தையும் தந்திருக்கின்றது.
எனவே இந்த செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாக நீதியான விசாரணை வேண்டும். சர்வதேச ரீதியாக விசாரணை இடம்பெற வேண்டும். ஒரு உண்மையான தீர்வு இந்த விடயத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
இன்று இந்த முயற்சியில் ஈடுபடுகின்ற நீதித்துறை சார்ந்தவர்களை நாம் நன்றியோடு போற்றுகின்ற அதேவேளையில் இந்த விசாரணை தொடர வேண்டும். இந்த விசாரணை ஊடாக தமிழினத்திற்கு நடைபெற்ற கொடுமை ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
செம்மணி புதைகுழியில் பச்சிளம் பாலகர் தொடக்கம் பெண்கள், ஆண்கள் என்று வேறுபாடு இன்றி இவ்வளவு கொடூரமாக புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது. தமிழர்களை வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம்
எனவே இரக்கமில்லாமல், யாராலும் மன்னிக்க முடியாத இந்த துயரமான சம்பவத்துக்கு இலங்கையிலே வாழுகின்ற அத்தனை ஈர நெஞ்சுடைய மனிதநேய அமைப்புகளும் சமய பண்புமிக்க பெரியோர்களும் நேர்மையாக குரல் கொடுத்து சரியான ஒரு தீர்வை பெற்று தர வேண்டும் என்று இந்த வேளையிலே அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சார்பில் பொது வேண்டுதலை விடுகின்றேன்.
போர் முடிந்தும் எமது சமூகம் இன்றும் துன்ப நிலையில் தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காணாமல் போனோரின் தாய்மார்கள் எந்நாளும் கண்ணீர் வடிப்பதும், வருகின்ற போகின்ற வெளிநாட்டு தூதுவர்களுக்கு பின்னால் கெஞ்சி மன்றாடி ஓடி திரிந்து அழுவதும் அவர்களையும் ஒரு காட்சி பொருட்களாக மற்றவர்கள் கண்டுவிட்டு போவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறதே ஒழிய தீர்வு வருவதாக இல்லை.
எனவே மிகப் பெரிய அத்தாட்சியாக அமைந்திருக்கின்ற செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட இந்த மனித எச்சங்கள் உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது.
இந்த விசாரணை ஒரு சர்வதேச விசாரணையாகி எம் மண்ணில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக தீர்க்கமான ஒரு நிலைப்பாட்டிற்கு உலகம் வரவேண்டும் என்று இந்த வேளையிலே மீண்டும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
