செம்மணி புதைக்குழி ஒரு கொடூர வரலாறு: சட்டக்கல்லூரியில் இருந்து ஒலித்த குரல்
செம்மணி புதைக்குழியானது யாராலும் மறக்க முடியாத கொடூர வரலாறு என இலங்கை சட்டக்கல்லூரியின் இறுதி வருட மாணவன் முஹம்மத் கான் என்பவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ம்மணி புதைக்குழி – இது ஒரு பெயர் மட்டுமல்ல.
இது யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களின் மறைக்கப்பட்ட கதைகள், அழிக்கப்பட்ட உயிர்கள் மற்றும் முடியாத நினைவுகளின் அடையாளம்.
பாலியல் வன்கொடுமை
1996 ஆம் ஆண்டு, கிருஷாந்தி குமாரசுவாமி (18 வயது) கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரோடு சேர்த்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழர் சமூகத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனிதகுலத்தை சோகத்தில் ஆழ்த்தியது.
இது ஒரு குடும்பத்தின் அழிவாக மட்டுமல்ல ரு இனத்தின் நெஞ்சைத் துளைக்கும் கொடூரத்தை வெளிக்கொணர்ந்தது.
வழக்கில் குற்றவாளிகள்
அந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும், இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச அளித்த அதிர்ச்சிகரமான வாக்குமூலம் 600 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் செம்மணியில் பொதுப் புதைக்குழிகளில் புதைக்கப்பட்டதாகவும் 16 இடங்களைத் தானே அடையாளம் காணக்கூடியதாகவும் இருக்கும் எனக் கூறியதிலிருந்து உண்மை இன்னும் பெரிதாக இருப்பதை எச்சரித்தது.
அதன்படி 1999 இல் அகழ்வுகள் நடைபெற்ற போது 25 புதைக்குழிகள் அகழப்பட்டு, 19 மனித எச்சங்கள் மற்றும் குழந்தைகளின் எச்சங்கள் உள்ளடங்களாக கண்டெடுக்கப்பட்டன.
இது சாதாரண தகவல் அல்ல, இது மனித உரிமை மீறல்களின் மரணச் சான்றிதழ்கள்.
சம்பவங்களின் பின்னணி
யுத்த காலத்தில் இதுவரை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியோ, தீர்வோ கிடைக்காமல் இருந்து வரும் நிலையில், செம்மணி புதைக்குழி மீண்டும் தமிழ் மக்களுக்கிடையே ஒரு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கொடூர சம்பவங்களின் பின்னணியில், உண்மையை வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கப்பெறவும் அரசாங்கம் தமது முழுக் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
வடக்கு, கிழக்கு மற்றும் இலங்கையின் பிற பகுதிகளில் வாழும் அனைத்து தமிழர்களின் உரிமைகளுக்காக சட்டக்கல்லூரி மாணவர்கள் எப்போதும் குரல் கொடுப்பார்கள் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
