மண்ணுக்குள் மக்கிப்போன மழை அங்கி...! கொடூரத்தின் உச்சமும் பேரினவாதத்தின் எள்ளிநகையாடலும்!
மழை பெய்யும்போது வளர்ந்த நமக்கே மனதில் ஒரு பேரானந்தம் பெருக்கெடுக்கும். அப்படியிருக்க பிஞ்சுக் குழந்தைகளுக்குச் சொல்லவா வேண்டும் ?
தெருவெங்கும் ஓடி பிளாஸ்டிக் கப்பல் விடுவதும், மழைத்துளிகளில் நனைந்து ஆட்டமிடுவதும்தான் அவர்களின் மழலைப் பருவத்தின் ஆகப்பெரியக் கொண்டாட்டம்.
அப்படித்தான் அந்தச் சிறியவனும் நினைத்திருப்பானோ என்னவோ... ஆசையாய் அந்த மழை அங்கியை (Raincoat) உடுத்திக்கொண்டு, மழையோடு துள்ளி விளையாட ஏங்கியிருப்பானோ என்னவோ...
ஆனால், வீதிகளில் ஓடி விளையாட வேண்டிய அந்தப் பிஞ்சு, செம்மணியின் கரிய மண்ணுக்குள் வெளிச்சமே அற்ற இருட்டில், இத்தனை வருடங்களாகத் தீராத வடுக்களுடன் புதைந்து கிடந்திருக்கின்றது.
இத்தனை ஆண்டுகளுக்குப் பின், அகழ்ந்தெடுக்கப்பட்டபோது அவனோடு சிதையாமல் எஞ்சியிருந்த அந்தச் சிறிய மழை அங்கி, பார்ப்பவர்களின் நெஞ்சைச் சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளது.
மரணத்தின் கடைசி நொடிகளில் அந்தச் சிறுவன் எவ்வளவு அஞ்சியிருப்பான் ?
- அம்மா... என்று கதறியபடி பயத்தில் முடங்கியிருப்பானா ?
- தன் பிஞ்சு மனதால், நமக்கு என்ன நடக்கிறது ? என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத அறியாமையில் தவித்திருப்பானா ?
- யாராவது வந்து இந்த இருளிலிருந்து நம்மைக் காப்பாற்ற மாட்டார்களா என ஏங்கியிருப்பானா ?
- அல்லது, இந்தப் பேரிருளுக்குள் தான் பல தசாப்தங்களாக முடங்கப்போவதை அறியாமலேயே அந்த உயிர் பிரிந்திருக்குமா ?
மழையிலிருந்து அவனைக் காக்க முயன்ற அந்தச் சிறிய அங்கி, நஞ்சால் சூழப்பட்ட கொடூரர்களிடம் இருந்து அவனைக் காப்பாற்ற முடியாமல், இறுதியில் மண்ணோடு மக்கிப் போய்விட்டது.
அந்த பிஞ்சு குழந்தையின் எலும்புக்கூடும், அதைச் சுற்றியிருந்த மழை அங்கியும் மனித மனசாட்சி கொண்ட அனைவரையும் உலுக்க வேண்டியவை.
ஆனால், இன்று சமூக ஊடகங்களின் சுவர்களில் அந்தப் புகைப்படம் சந்திக்கும் கேலிகளும் எள்ளிநகையாடல்களும், இந்தச் சமூகம் எவ்வளவு கொடூரமான பேரினவாதக் குருட்டுத்தனத்தில் மூழ்கியிருக்கிறது என்பதைத் தோலுரித்துக் காட்டுகின்றன.
போரின் கோரத்தையோ, இழப்பின் வலியையோ அறிந்திராத ஒரு தலைமுறை இளைஞர்கள், அகழ்ந்தெடுக்கும் எலும்புக்கூட்டுப் புகைப்படங்களை வெறும் மீம்களாகவும் (Memes), கேலிச் சித்திரங்களாகவும் மாற்றிச் சிரிப்பது, நாட்டில் இனவாதம் இன்னும் சாகவில்லை என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
ஒரு மனிதனின் மரணம் கொண்டாட்டமாக மாறும்போது, அங்கே மனிதநேயம் சாம்பலாகிவிட்டது என்றுதான் பொருள்.
கொல்லப்பட்ட பிஞ்சுகளுக்காகவும், புதைக்கப்பட்ட சொந்தங்களுக்காகவும் தமிழ் பேசும் மக்கள் தங்கள் கதறலையும் நீதிக்கான ஆதங்கத்தையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டால், உடனடியாக அது பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் என்றும், இனவாதத்தைத் தூண்டுதல் என்றும் முத்திரையிடப்படுகிறது.
அடுத்து கணக்குகள் முடக்கப்படுகின்றன விசாரணைகள் பாய்கின்றன.
அதே நேரத்தில், போர் வெற்றி என அகழ்ந்தெடுக்கும் எலும்புக்கூட்டுப் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டாடுபவர்களை எந்தச் சட்டமும் கவனிப்பதில்லை அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
ஒரு தரப்பின் அழுகை குற்றமாகவும், மறுதரப்பின் கொடூரம் வெற்றிக் கொண்டாட்டமாகவும் பார்க்கப்படும் இந்த இரட்டை சட்ட முறைமைதான், மீண்டும் மீண்டும் ஆழமான வடுக்களை உருவாக்குகிறது.
செம்மணி அகழ்வாராய்ச்சியில் வெளிவருவது வெறும் எலும்புகள் அல்ல புதைந்து கிடக்கும் உண்மை எனும் சவப்பெட்டி மீது அடிக்கப்படும் ஆணிகள்.
யுத்தத்தின் கொடூர வலி என்னவென்றே அறியாமல், வரலாற்றின் கசப்பான பக்கங்களைப் படிக்காமல் பிறந்தது முதல் இன்று கேலிக்காக கையில் வைத்திருக்கும் கைப்பேசி வரை, பெற்றோரின் அரவணைப்பிலேயே பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களில் உலாவுவது வெறும் எலும்புக்கூடுகள் மட்டும்தான்.
ஆனால்... உணவு, உறங்க இடம், தாய், தந்தை, உடன்பிறந்தோர் மற்றும் கல்வி எனத் தன் வாழ்க்கையின் சகலத்தையும் இழந்து ஆறா வடுக்களையும் நீறா வலிகளையும் மட்டுமே சுமந்து நிற்கும் தமிழ் உறவுகளுக்குத்தான் தெரியும் அவை வெறும் எலும்புக்கூடுகள் அல்ல அவை, காலம் காலமாய் இந்த மண்ணில் நிகழ்த்தப்பட்ட அநீதிகளையும் வரலாற்று உண்மைகளையும் மறைக்க விடாமல், அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்திச் செல்லும் காலத்தின் அழியாத சான்றுகள் என்பது.
எள்ளி நகையாடி பதிவுகளாலும் போலியான கொண்டாடத்தினாலும் வரலாற்றை மறக்கடிக்க நினைப்பது என்பது மிகப்பெரிய முட்டாள்தனம்.
அழித்தொழிக்க நினைத்த வரலாற்றை, இந்த எலும்புகள் மீண்டும் மீண்டும் உரக்கப் பேசிக்கொண்டே இருக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
ஏனெனில், புதைக்கப்பட்டவை வெறும் மனித உடல்கள் அல்ல... மறுக்கப்பட்ட நீதிக்கான விதைகளே...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 23 மணி நேரம் முன்