செட்டிக்குளம் பிரதேச சபையில் அமளி துமளி! வெளியாகிய பரபரப்பு காணொளி!
செட்டிக்குளம் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டு பாதீடு ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பாரபட்சம் காரணமாக தவிசாளருக்கும், உப தவிசாளருக்கும் இடையில் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் உபதவிசாளர் தனது விளக்கத்தை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.
செட்டிகுளம் பிரதேச சபை
“செட்டிகுளம் பிரதேச சபை தொடர்பான இணையத்தில் பரவும் காணொளி தொடர்பாக கடந்த மாதம் முன்வைக்கப்பட்ட வருடாந்த வரவு–செலவுத் திட்டம் தொடர்பில், தனது வட்டார மக்களின் நலன் குறித்த என் ஜனநாயகக் கருத்தை நான் சபையின் முன் தெளிவாகவும், பொறுப்புடனும் முன்வைத்தேன்.

அதில் தவிசாளர் அவர்களே, உறுப்பினர்களே,மதிப்பிற்குரிய செயலாளரே இன்றைய தினம் முன்வைக்கப்பட்டுள்ள வருடாந்த வரவு–செலவுத் திட்டம் குறித்து என்னுடைய ஆழ்ந்த கவலையை, மேலும் மிகத் தெளிவான எதிர்ப்பையும் இச்சபையின் முன் பதிவுசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
என்னைச் சார்ந்த அடிப்படை ஜனநாயக உரிமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்ட முன் தயாரிப்பு என்பது அனைத்து உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு ஒவ்வொருவரின் வட்டார தேவைகளை கேட்டு மக்கள் சார்ந்த கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட வேண்டிய மிக முக்கியமான பணியாகும்.
முற்றிலும் புறக்கணிப்பு
ஆனால், வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியுள்ளதேனெனில், என்னை முற்றிலும் புறக்கணித்தபடியும், ஆலோசிக்காதபடியும், என் வட்டார மக்களின் கருத்துகள் எதையும் கேட்காதபடியும் இந்த வரவு செலவு திட்டம் தாங்களாகவே தயாரிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு சாதாரண தவறு அல்ல . ஜனநாயக செயல்முறையை அவமதிக்கும், உறுப்பினர்களின் மரியாதையை புண்படுத்தும், என் மக்கள் முன் என்னை கேவலப்படுத்தும் செயல்.
எனது வட்டார மக்களின் வேலைத்திட்டங்கள் சேர்க்கப்படவில்லை. 2026ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி திட்டங்களை உருவாக்கும் நோக்கில் என் வட்டாரத்தில் நான் நேரடியாக மக்களிடத்தில் கருத்துக்களை சேகரித்தேன்.
பொதுக்கூட்டங்கள் நடத்தினேன். பாதீட்டு கலந்துரையாடல்கள் நடத்தினேன். மக்கள் தேவைகளைப் பதிவு செய்தேன். ஆனால், என் மக்கள் முன்வைத்த ஒரு திட்டமும் கூட இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.. இதன் பொருள் என்ன” என கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தி - கபில்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |