சிறுவர்களின் பாதுகாப்பு- கோட்டாபய வழங்கிய அறிவுறுத்தல்
சிறுவர்களின் பாதுகாப்பை கிராமிய மட்டத்தில் பலப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது பற்றி வெளிவந்திருக்கும் தகவல்களுக்கு ஏற்ப, அதிகளவான சிறுவர்கள் தோட்டப்பகுதிகளில் இருந்து வேலைக்கு அமர்த்தப்படுகின்றார்கள். இந்நிலையைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை கிராம உத்தியோகத்தர் மட்டத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களின் விபரங்கள் கிராம உத்திகோகத்தர்களிடம் உள்ளன. வீடொன்றில் பிள்ளை ஒருவர் இல்லாமல் போகும்போது அது பற்றி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் உடனடியாக செயற்பட்டு சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக்கு சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது. அதனை யதார்த்தமாக்குவதற்கு தனியான ராஜாங்க அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது என்பதனையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
சிறுவர் மற்றும் மகளிர் மீதான துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு ராஜாங்க அமைச்சு முன்னெடுத்திருக்கும் நிகழ்ச்சித் திட்டங்களை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.
முன்பள்ளிகள், பாடசாலைகள், அறநெறிப்பாடசாலைக் கல்வி அனைத்து பிள்ளைகளுக்கும் கட்டாயப்படுத்தப்பட வேண்டும். சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பாதிருப்பதன் காரணங்களை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைத்திட்டத்தின் பிரகாரம் சிறுவர் பாதுகாப்பு கொள்கையை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிககைகளும் பூர்த்தியடைந்திருப்பதாக ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த இந்தப் பேச்சுவார்த்தையின்போது தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்கு உள்ளாகிய மரணமடைந்த சிறுமியின் குடும்பத்திற்காக வீடொன்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்கும், குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் சிறுமியின் இரண்டு சகோதரிகளுக்கும் சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த இந்தச் சந்திப்பின் போது தெரிவித்தார்.