ரஷ்யாவிற்கு அபாயகரமான ஆயுதங்களை வழங்கும் சீனா :பிரிட்டன் குற்றச்சாட்டு
உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக ரஷ்யாவுக்கு சீனா அபாயகரமான ஆயுதங்களை விநியோகிப்பதாக பிரிட்டன் குற்றஞ்சாட்டியுள்ளது.
உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்யா அண்மைக் காலமாக தீவிரமாக தாக்குதல் நடத்தி முன்னேறிவரும் சூழலில் சீனா மீது இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சா் கிரான்ட் ஷாப்ஸ்(Grant Shapps) கூறியதாவது:
உக்ரைனுக்கான உதவிகளை அதிகரிக்க
எங்களுக்குக் கிடைத்துள்ள புதிய உளவுத் தகவலின்படி, உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்கான ஆயுத தளவாடங்களை ரஷ்யாவுக்கு சீனா விநியோகித்துவருகிறது. எனவே, மேலை நாடுகள் விழிப்படைந்து உக்ரைனுக்கான உதவிகளை அதிகரிக்க வேண்டும் என்றாா்.
ஏற்கனவே, உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்கான ஆயுதங்களை தயாரிப்பதற்குத் தேவைப்படும் முக்கிய பொருள்களை ரஷ்யாவுக்கு சீனா அனுப்புவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டிவருகிறது. ஆனால், ரஷ்யாவுக்கு சீனா நேரடியாக ஆயுதங்களை விற்பனை செய்வதாகக் கூறப்படுவது இதுவே முதல்முறை.
அமெரிக்காவின் சந்தேகம்
இருந்தாலும், பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சரின் இந்தத் தகவல் குறித்து அமெரிக்கா சந்தேகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவன்(Jack Sullivan) கூறுகையில், ‘
ரஷ்யாவின் போா் முயற்சிக்கு சீனா உதவியளிப்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் ரஷ்யாவுக்கு அந்த நாடு நேரடியாக ஆயுதங்கள் அனுப்புவதாகத் தெரியவில்லை’ என்றாா்.
பிரிட்டனின் இந்தக் குற்றச்சாட்டை சீனாவும் மறுத்துள்ளது. இது குறித்து லண்டனிலுள்ள சீன தூதரக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்கள் விநியோகிப்பதாகக் கூறுவது அடிப்படை முகாந்திரமற்றது; இதன் மூலம் பிரிட்டன் சீனா மீது பொய்யான குற்றச்சாட்டை பரப்பிவருகிறது’ என்று சாடினாா்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |