கொழும்புத் துறைமுகத்தின் 392 மில்லியன் டொலர் திட்டத்திலிருந்து சீன நிறுவனம் விலகல்!
கொழும்புத் துறைமுகத்தில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த 392 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தக மற்றும் தளவாட மையத் திட்டத்திலிருந்து சீனாவின் China Merchants Port Holdings நிறுவனம் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் இந்தத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, இழப்பீடாக 21.9 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபை இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தெற்காசிய வர்த்தக மற்றும் தளவாட மையம் (SACLH) எனப் பெயரிடப்பட்ட இந்த திட்டத்தைக் கைவிடும் தீர்மானத்தை, குறித்த சீன நிறுவனம் 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி ஹொங்கொங் பங்குச் சந்தைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை துறைமுக அதிகாரசபை
50 ஆண்டுகால கட்டியெழுப்புதல், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் (BOT) அடிப்படையில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்ட இந்த திட்டம், தெற்காசியாவின் மிகப்பெரிய தளவாட வளாகங்களில் ஒன்றாக உருவாக்கப்படவிருந்தது.
திட்டத்தின் பங்குகளில் சீன நிறுவனம் 70 சதவீதத்தையும், இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் Access Engineering PLC ஆகிய நிறுவனங்கள் தலா 15 சதவீதத்தையும் கொண்டிருந்தன.

இந்த திட்டத்துக்காகப் பங்குதாரர்கள் மொத்தமாக 37.14 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்திருந்தனர். இதில் 26 மில்லியன் டொலர்களைச் சீன நிறுவனம் முதலீடு செய்திருந்தது.
எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டின்படி, திட்ட நிறுவனத்துக்கு 21.905 மில்லியன் அமெரிக்க டொலர்களை 30 நாட்களுக்குள் இலங்கை துறைமுக அதிகாரசபை செலுத்த வேண்டும்.
இந்தத் தொகையும் எஞ்சியுள்ள சுமார் 7.85 மில்லியன் டொலர்களும் பங்குதாரர்களின் முதலீடு மற்றும் செலவுப் பகிர்வு விகிதங்களுக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
புதிய முதலீட்டுத் திட்டங்கள்
2023 டிசம்பரில், இந்த ஐந்து மாடிக் கட்டடத் திட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் மூலோபாய அபிவிருத்தித் திட்டம் என்ற அந்தஸ்தை வழங்கியிருந்தது.
இதன் கீழ், 15 ஆண்டுகளுக்கு நிறுவன வருமானவரி மற்றும் பங்காதாய வரி உள்ளிட்ட பல்வேறு வரிச் சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தன.

எனினும், காணி கையகப்படுத்தல், ஒழுங்குமுறை அனுமதிகள் மற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களால் திட்டத்தை எதிர்பார்த்தபடி முன்னெடுக்க முடியவில்லை எனக் கடல்சார் துறைசார் வெளியீடு தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த காணியில் புதிய முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான முன்மொழிவுகளைக் கோர இலங்கை துறைமுக அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.
கொழும்புத் துறைமுகத்தைப் பிராந்திய கடல்சார் வர்த்தக மற்றும் தளவாட மையமாக மேம்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்ட இந்தப் பாரிய வெளிநாட்டு முதலீட்டுத் திட்டம் கைவிடப்பட்டமை, இலங்கையின் துறைமுக மற்றும் தளவாடத் துறைக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவாகக் கருதப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |