இலங்கைக்கு கடன் நெருக்கடி இல்லை! வாதிடும் சீன பேராசிரியர்
இலங்கைக்கு கடன் நெருக்கடி இல்லை. மாறாக அந்நிய செலாவணி பற்றாக்குறையே நிலவுகின்றது என சீன சமூக அறிவியல் கல்வியகத்தின் இணைப் பேராசிரியரான ஜியா டுகியாங் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பலவீனமான பொருளாதாரக் கட்டமைப்பு, அரசாங்கத்தின் தவறான கொள்கைகள், சவால்களை சமாளிக்க இயலாமை, அத்துடன் பாதகமான வெளிப்புறக்காரணிகள் என்பனவே அந்நிய செலாவணி பற்றாக்குறைக்கு காரணமாக அமைகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2020 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறை 59.67 %இருந்தது. தொழில்துறை மற்றும் விவசாயத் துறைகள் 26.25% மற்றும் 8.36% மட்டுமே இருந்தன.
அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு
எனவே இலங்கையின் தொழில்துறை கட்டமைப்பு தீவிர வெளிப்புற அழுத்தத்தைத் தாங்கும் அளவுக்கு வலுவாக இருக்கவில்லை கொரோனா தொற்றுநோய் சுற்றுலாத் துறைக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்றும் ரஷ்யா - உக்ரைன் மோதலால் பணப்பயிர்களின் ஏற்றுமதி திடீரென குறைந்த பிறகு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக குறையத் தொடங்கியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அவர் மேலும் தெரிவிக்கையில் நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தன்னால் இயன்றதை சீனா மேற்கொள்ளும் என்று அவர் உறுதியளித்தார்.
இதற்கு முன்னர் கடந்த ஜனவரியின் இலங்கையின் கடன் தொடர்பில் கருத்துரைத்திருந்த சீனாவின் சர்வதேச உறவுகள் நிறுவனத்தின் தலைவர் ஃபூ சியாவோகியாங்கும் இலங்கையில் அந்நிய செலாவணி பற்றாக்குறையே நிலவுவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
