விரிவடையும் சீனாவின் உலகப் பொருளாதாரம் - கன கச்சிதமான காய் நகர்த்தல்!
அபிவிருத்தி அரசியல், நல்லிணக்கச் செயற்பாடுகள், மனித உரிமைப் பாதுகாப்புகள் என்ற பசப்பு வார்த்தைகளைக் கூறி இலங்கை, மியன்மார் மற்றும் இஸ்ரேல் போன்ற இன ஒடுக்கல் அரசுகளுக்கு ஒத்துழைப்பதை மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிறுத்த வேண்டும்.
அமெரிக்காவும் சீனாவும் உலக அரசியல் ஒழுங்கில் தங்கள் - தங்கள் பலத்தை நிறுவிக்கொள்ள எடுக்கும் முயற்சிகளில் சீனா - ரஷ்யா உறவும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டுச் செயற்பாடுகளும் பிரதான வகிபாகத்தைக் கொண்டுள்ளன.
இதில் இந்திய வகிபாகம் என்பது இரட்டைத்தன்மை கொண்டுள்ளதால், அமெரிக்க - சீன வல்லாதிக்கப் போட்டியில் இந்தியா எந்தப் பக்கம் என்றில்லாத நிலைதான். அமெரிக்கச் சீன கருத்துப் பரிமாற்றங்கள் ஊடே பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியமற்ற தன்மை புலப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகளின் செய்பாடுகளை சாதகமாக்கிய சீனா
ஆனால் இந்தியாவின் சில பிரதான ஊடகங்கள் அதனை இந்திய மூலோபாயமாகக் காண்பிப்பதுதான் வேடிக்கை. மேற்குலகம் மற்றும் ஐரோப்பிய நாடுகள், மனித உரிமை - நல்லிணக்கம் ஆகிய போதனைகளை, சிறிலங்கா போன்ற ஒற்றையாட்சி மூலமான இன ஒடுக்கல் அரசுகளுக்குத் தாலாட்டி ஊட்டிக் கொண்டிருப்பதைச் சாதகமாக்கிச் சீனா தனது காரியத்தைக் கன கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறது.
ஆனால் இப்போதனைகளை சீனாவுக்குச் செய்ய முடியாது. மாறாகப் புவிசார் பொருளாதார நலன் அடிப்படையில், சீனாவை விட்டு விலக முடியாத சூழலே இந்த நாடுகளிடம் விஞ்சிக் காணப்படுகின்றன.
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) இருபதாவது மாநாடு முடிவடைந்த பின்னர் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் பணியகத்தின் உறுப்பினரும் சீன அரசின் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, திங்களன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டனி பிளிங்கனுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார்.
குறிப்பாகப் பிராந்தியச் செயற்பாடுகள் பற்றிய உரையாடல்களில் இந்தியா பற்றிய கரிசனை தவிர்க்கப்பட்டதாகவே சீனாவின் குளோபல் ரைமஸ் செய்தி நிறுவனத்தின் ஆக்கங்கள் வெளிப்படுத்துகின்றன.
சீனாவை ஒடுக்கும் செயற்பாடுகளை அமெரிக்கா நிறுத்த வேண்டுமென வலியுத்தியிருக்கிறார் வாங் யீ. அத்துடன் சீனாவின் இராஜதந்திர மற்றும் உள்நாட்டுக் கொள்கைகள் திறந்த மற்றும் வெளிப்படையானவை எனவும் அமெரிக்கச் சித்தாந்தம் அதனைக் கண்மூடித்தனமாக அணுகக்கூடாதென்றும் வாங் யீ வலியுறுத்தியிருக்கிறார்.
சீனா தொடர்பான அமெரிக்கக் கொள்கை என்பது நிலையானது. அதனை உறுதிப்படுத்தும் பல செயற்பாடுகள் சமீபகாலமாக வெளிப்பட்டு வரும் நிலையில் இருவரும் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றனர்.
உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா
உலக அரசியல் அதிகார மையத்துக்கான போட்டியின் மத்தியில் அன்டனி பிளிங்கன், வாங் யீ ஆகிய இருவருடையேயும் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலை உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையேயான கருத்துப் பரிமாற்றமாகப் பார்க்க முடியும்.
ஏனெனில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது தேசிய மாநாட்டு அறிக்கையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக அன்டனி பிளிங்ரன் கூறியிருக்கிறார்.
உலக அமைதியை ஆதரிக்கும் மற்றும் பொதுவான வளர்ச்சியை முன்னோக்கித் தள்ளும் இராஜதந்திரக் கொள்கையில் சீனா இணைந்துகொள்ளும் என்று வாங் யீ அண்டனி பிளிங்ரனிடம் பதிலுக்குக் கூறியுமுள்ளார்.
இந்த உரையாடலின் பின்னர் சீன வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவின் பொருளாதாராச் சந்தையை உலகில் பகிரங்கமாக திறந்து விஸ்தரிப்பது மற்றும் சீன நவீனமயமாக்கல் மூலம் மனித குலத்தின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பது மற்றும் சீனாவின் புதிய வளர்ச்சியின் மூலம் உலகிற்கு புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருவது போன்ற அதன் அடிப்படைத் தேசியக் கொள்கைக்கு உறுதிபூண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா உண்மையிலேயே சீனாவைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினால், அந்த அறிக்கையைக் கவனமாக படிக்க வேண்டும் என்றும் சீனாவின் குளோல் ரைமஸ் செய்தி நிறுவனம் கருத்து வெளியிட்டுள்ளது.
கட்சியில் இரண்டு முறை மட்டுமே பொதுச் செயலாளராக இருக்க முடியும் என்ற விதி கடந்த 2018 ஆம் ஆண்டு மாற்றப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாகவும் ஜீ.ஜின்பிங் கட்சியின் பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சீனப் பட்டுப்பாதைத் திட்டம்
கட்சியின் மாநாடு முடிவடைந்த பின்னர். அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தொலைபேசியில் உரையாடியது போன்று பாகிஸ்தான், வியட்நாம் போன்ற நாடுகளுடனும் சீனா தொடர்பு கொண்டு தமது அரசின் கொள்கை நிலைப்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்ததுடன், அந்த நாடுகளுக்குச் சீனா தொடர்ந்து வழங்கவுள்ள பொருளாதார உதவிகள், சீனப் பட்டுப்பாதைத் திட்டங்கள் குறித்தும் உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் சென்ற வாரம் சீனாவுக்குப் பயணம் செய்து சீன - பாக்கிஸ்தான் பொருளாதாரத் திட்டங்கள் பற்றி உரையாடியிருக்கிறார். இப் பின்னணியிலேதான் ஜீ-7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு வியாழக்கிழமை ஜேர்மனியில் நடைபெற்றுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் நேட்டோவும் ரஷ்யாவும் அணு ஆயுதப் பயிற்சிகளை நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அந்தப் பயிற்சிகள் குறித்தே அதிகம் விவாதிக்கப்பட்டதாக சீனாவின் குளோபல் ரைம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
ஆனால் ஜீ-7 மாநாட்டில் ரஷ்யா – உக்ரைன் போரின் பாதிப்புகள் உக்ரைன் அரசுக்கான பொருளாதார உதவிகள் மனிதாபிமானப் பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக வோஷிங்கடன் ரைம்ஸ் கூறுகின்றது.
அத்துடன் ஒரு ஜனநாயக, இறையாண்மை மற்றும் வளமான உக்ரைனுக்கு ஜீ - 7 மாநாடு நிலையான ஆதரவு உட்பட, அழுத்தமான உலகளாவிய சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்ரன் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், ரஷ்ய – உக்ரைன் போர்ச் சூழலில் ஐரோப்பாவில் இராணுவ இருப்புக்கள் குறைவடைந்து பொருளாதாரச் சிக்கல்களால் ஆழமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், உக்ரைன் நாட்டுக்கான உதவிகள் எவ்வாறு சாத்தியப்படும் என்ற கேள்விகள் எழுகின்றன.
ஜீ -7 நாடுகள், ரஷ்யாவைத் தண்டிக்கும் நோக்கத்துடன் செயற்படுகின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. குறிப்பாகச் சீனா நார்மல் பல்கலைக்கழகத்தின் ரஷ்ய ஆய்வுகளுக்கான மையத்தின் உதவியாளர் குய் ஹெங், ஜீ 7 நாடுகள் உக்ரைனுக்கான ஆதரவு ஏற்கனவே வரம்பு மீறி மேற்கொண்டுள்ளதாகக் கூறுகிறார்.
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் மேற்குலகு
ஆனால் இந்த உதவிகள் தொடரக்கூடிய நிலையில் இல்லை என்றும் ஒன்பது மாதங்கள் சென்றுவிட்ட சூழலில், ஜீ -7 நாடுகள் உக்ரைனுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முடியுமா என்பது சந்தேகமே எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இப்பின்னணியில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்கும் ஐரோப்பிய நாடுகளும் முற்படுவதாகவும் குய் ஹெங் கூறுகிறார்.
ஆகவே உக்ரைன் போர்ச் சூழல், ஐரோப்பியர்கள் மத்தியில், நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஐரோப்பிய மக்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளது என்பதையே இக்கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.
ஜீ - 7 நாடுகள் இப்போது கடுமையான பணவீக்கம் காரணமாகப் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்கின்றன, மேலும் உக்ரைனுக்கு ஆதரவாக அதிக பணத்தைச் செலவிடுவதால் உள்நாட்டில் எதிர்ப்பை எதிர்கொள்ளும் நிலை மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது என்பதையே ஐரோப்பிய ஊடகங்களும் வெளிப்படுத்துகின்றன.
உலகப் பொருளாதாரத்திற்கான கீல் இன்ஸ்டிடியூட் (Kiel Institute for the World Economy) மூலம் பராமரிக்கப்படும் தரவுத்தளத்தின்படி, ஜனவரி 2022 முதல் அமெரிக்கா 52 பில்லியன் டொலர்களை உக்ரைன் அரசுக்கு வழங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உக்ரைன் போருக்காக ஒக்ரோபர் 17 மற்றும் 26 ஆம் திகதிகளில் நேட்டோ நாடுகளும் மற்றும் ரஷ்யாவும் வெவ்வேறாக அணு ஆயுதப் பயிற்சிகளை நடத்தியுமுள்ளன.
உக்ரைன் 'அழுக்கு குண்டுகளை' பயன்படுத்தத் தயாராகி வருவதாக ரஷ்யா கூறியதால், அதற்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்கலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் நம்புகின்றன.
அணு ஆயுதத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த எத்தனிக்கும் ரஷ்யா
ஆனால் அணு சக்திகளின் மோதலைத் தவிர்க்க வேண்டும் என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சு சென்ற புதன்கிழமை கூறியுள்ளது. மாஸ்கோவின் அணுசக்தி கோட்பாடு 'இயற்கையில் முற்றிலும் தற்காப்பு' ஆகும், இது அணுசக்தி ஆக்கிரமிப்பு அல்லது 'ரஷ்ய அரசின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது' மட்டுமே என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால் ரஷ்யா வெளியுறவு அமைச்சின் இத்தகைய அறிவுப்புகளை மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் நம்புவதாக இல்லை. ஏனெனில் உக்ரைன் போரில் ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்பு இன அழிப்பு போன்ற விடயங்கள் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ள நிலையிலும், உக்ரைன் படைகளின் தாக்குதல் வேகமாக அதிகரித்துச் செல்லும் சூழலிலும் ரஷ்யா நிச்சயம் அணு ஆயுதத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தலாம் என்றே மேற்கு நாடுகள் அஞ்சுகின்றன.
அத்துடன் சீனா ரஷ்யாவுக்கு இதுவரையும் ஆயுதங்களை வழங்கவில்லை என்றாலும், சீனாவின் ரஷ்ய ஆதரவுப் போக்குக்குப் பின்னால் இருக்கக்கூடிய ஆபத்துக்கள் பற்றி மேற்கு நாடுகள் நன்கு அறிந்துள்ளன என்ற தொனியை அமெரிக்க ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன.
அமெரிக்க – சீன உறவு பற்றி அதாவது இரு நாடுகளும் ஒன்றையொன்று எப்படி இழந்தது என்ற தலைப்பில் தி நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் தோமஸ் எல். ப்ரைட்மேன் சென்ற செவ்வாய்க் கிழமை கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.
பொருளாதார உறவு இருந்தாலும் சீனாவின் அரசியல் கொள்கைதான் அமெரிக்காவுடன் சிக்கல் எழக் காரணம் என்று கட்டுரையாளர் வாதிடுகிறார். அமெரிக்காவுடனான அதன் உறவுகளை மோசமாக்கியதாக சீனாவின் நான்கு முக்கிய போக்குகளை ப்ரைட்மேன் குறிப்பிட்டார்.
அதாவது சீனப் பொருளாதாரத்தின் திறப்பு தோல்வி, சீன தேசியவாதம், மிகவும் தீவிரமான சீன வெளியுறவுக் கொள்கை மற்றும் நாட்டின் பூஜ்ஜிய- கோவிட் 19 கொள்கை என்று தனது கட்டுரையில் ப்ரைட்மேன் நியாயம் கற்பிக்கின்றார்.
சீனா மீதான அமெரிக்காவின் தொழில்நுட்ப ஒடுக்குமுறை, மனித உரிமைகள் மற்றும் தைவான் பிரச்சினை. உக்ரைன் போர் போன்ற விவகாரங்கள் அமெரிக்க - சீன உறவகள் மேலும் சிதைவடையக் காரணமாகியது என்பதே கண்கூடு.
ஆனாலும் ஜீ.ஜின்பிங் மூன்றாவது தடவையாகவும் சீன அதிபராகப் பதவியேற்ற பின்னர் அமெரிக்காவுடன் உறவைப் பேண விடுத்த அழைப்பும், உக்ரைன் போரில் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் களைத்துப் போயுள்ள சூழலிலும் உல அரசியல் ஒழுங்கு சீரான நிலையில் இல்லை என்பது வெளிப்படை.
இருந்தாலும் சீனாவின் பொருளாதார உலக விரிவாக்கமும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை விரிவாக்கமும் உலக அரசியல் ஒழுங்கில் ஆதிக்கம் செலுத்தும் நிலை மேலும் உறுதியானால், ஈழத்தமிழர்கள் போன்று தேசிய விடுதலை கோரி நிற்கும் அனைத்துத் தேசிய இனங்களுக்கும் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கும் ஆபத்து என்பதில் சந்தேகமேயில்லை.
ஆகவே அமெரிக்கா போன்ற மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகள், மியன்மார் முஸ்லிம்கள், ஈழத்தமிழர்கள் மற்றும் பாலஸ்தீனம் போன்ற விவகாரங்களில் நீதியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
தேசிய இனங்களின் அரசியல் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும். மாறாக அபிவிருத்தி அரசியல், நல்லிணக்கச் செயற்பாடுகள், மனித உரிமைப் பாதுகாப்புகள் என்ற பசப்பு வார்த்தைகளைக் கூறி இலங்கை, மியன்மார் மற்றும் இஸ்ரேல் போன்ற இன ஒடுக்கல் அரசுகளுக்கு ஒத்துழைப்பதை நிறுத்த வேண்டும்.
இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.