சீனாவின் முத்துமாலை ஒபரேசன்! சீற்றத்தில் இந்தியா?
சீனா ஒரு முத்துமாலை வியூகத்தை அமைத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். இதன்போது மேலும் வெளியிட்ட அவர்,
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கின்ற போது அது இந்தியாவிற்கு விடுக்கின்ற ஓரு சவாலாகத்தான் பார்க்கப்படுகின்றது. ஏன் என்றால் இன்று சீனா ஒரு முத்துமாலை வியூகத்தை அமைத்துவருகின்றது.
பாகிஸ்தானாக இருக்கட்டும், நேபாலாக இருக்கட்டும், மியன்மாராக இருக்கட்டும் வங்காளதேசாக இருக்கட்டும் எல்லா நாடுகளிற்கும் அளவிற்கு அதிகமான கடன்களை கொடுத்து பொறிக்குள் விழுத்தி - இந்தியாவைச் சுற்றி பெரியதொரு முத்துமாலை வியூகத்தை அமைத்து இருக்கின்றது.
அந்த முத்துமாலை வியூகத்தில் முக்கியமான ஒரு கேந்திர நிலையமாக இப்போது இலங்கை மாறி இருக்கின்றது. வட புலத்தில் அவர்கள் தங்களுடைய கால்களைத் தரிப்பார்களாக இருந்தால் இந்தியாவின் ஆயுத களஞ்சியமென்பது தென்னிந்தியா பக்கமாக இருக்கின்றது.
ஆகவே நவீன தொழில் நுட்பங்களை வைத்துக்கொண்டு இந்தியாவை முழுமையாக அவதானிப்பதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது.
இந்த நிலையில் கிழக்கில் வடக்கில் சீனா கால் ஊன்றுகின்றபோது நிச்சயமாக அது இந்தியாவிற்கு ஒரு பெரிய ஆத்திரத்தை ஏற்படுத்துகின்ற ஒரு செயலாக இருக்கும்.
அதன்மூலமாக இந்தியா மாத்திரம் அதனை எடுத்துக்கொள்ளாமல் யப்பானும் விரும்பாது. அமெரிக்காவும் விரும்பாது மேற்குலக நாடுகளும் விரும்பாது.
எனவே அபிவிருத்தி என்கின்ற போர்வையில் சீனாவின் இலங்கை மீதான ஊடுறுவல் என்பது நிச்சயமாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரியதொரு பகையை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக இருக்கும்.
அவர்களுடைய பாதுகாப்பை அடிப்படையாக வைத்துக்கொண்டு சில வேளைகளில் கச்சைதீவைக் கூட இந்தியா மீளப்பெறக்கூடிய நிலமை ஏற்படலாம் என்று தெரிவித்தார்.