தேச வரைபடத்தில் மாற்றம்! இந்தியாவை மீண்டும் சீண்டும் சீனா
இந்தியாவுக்குட்பட்ட அருணாசல் பகுதியை இணைத்து சீனா வெளியிட்ட புதிய வரைபடத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
சீனா இந்த ஆண்டுக்கான புதிய வரைபடத்தை கடந்த 28 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிட்டிருந்தது
குறித்த வரைபடத்தில் இந்தியாவுக்கு உட்பட்ட அருணாசல், அக்ஷாய் சின் உள்ளிட்ட பகுதிகளைத் தங்கள் பகுதிகளாக சீனா குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, தாய்வான், தென் சீனக் கடல் உள்ளிட்டவற்றையும் தங்கள் உரிமைக்கு உள்பட்ட பகுதியாக சீனா அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அருணாசல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என வெளியுறவு அமைச்சகம் தொடா்ந்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய வரைபடம்
சீனாவின் புதிய வரைபடம் குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா நிராகரிக்கிறது.
சீன அரசின் இது போன்ற நடவடிக்கைகள், எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண்பதை மேலும் சிக்கலாக்கும். இது தொடா்பாக சீனாவுடன் தூதரக ரீதியில் எதிா்ப்பைப் பதிவு செய்துள்ளோம்.
எந்தவித அடிப்படையும் இல்லாமல் சீனா தயாரித்துள்ள புதிய வரைபடத்தை இந்தியா முற்றிலுமாக நிராகரிக்கிறது’ என்றாா்.
காங்கிரஸ் கண்டனம்
சீனாவின் புதிய வரைபடம் குறித்து காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அருணாசல், அக்ஷாய் சின் ஆகிய பகுதிகள் இந்தியாவுடன் எப்போதும் ஒருங்கிணைந்தவை.
அவற்றை இந்தியாவில் இருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது. தன்னிச்சையாக சீனா உருவாக்கிய வரைபடங்கள் எதுவும் உண்மையை மாற்றிவிடாது.
மற்ற நாடுகளின் பிராந்தியங்களை சீனா தொடா்ந்து அத்துமீறி கைப்பற்ற முயல்கிறது. அவற்றை வரைபடங்களில் இணைப்பது, புதிய பெயா்களை இடுவது உள்ளிட்டவற்றில் சீனா ஈடுபட்டு வருகிறது.
சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
