சீன அதிபர் தொடர்பில் வெளிவந்துள்ள முக்கிய தகவல்
சீன அதிபர் ஜின்பிங்கின் அரசியல் சித்தாந்தம் பாடசாலை மற்றும் கல்லூரி பாட புத்தகங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அண்மைக் காலமாக ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியை மேலும் வலுப்படுத்தவும், எதிர்காலத்திலும் அக் கட்சியின் அதிகாரத்தை நிலை நாட்டுவது தொடர்பிலும் அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை சக அரசியல் தரப்பினர் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கான தேசிய பாடத்திட்டத்தில் அதிபர் ஜின்பிங்கின் அரசியல் சித்தாந்தம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு புதிய சகாப்தத்தை காண சீன பண்புகளுடன் சோஷலிசம் பற்றிய ஜின்பிங்கின் சிந்தனை அனைத்து நிலைகளிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில் இணைக்கப்படும் என சீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய பாடநூல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிபரின் அரசியல் சித்தாந்தம், அடிப்படை தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வியின் பல்வேறு பாடங்களை உள்ளடக்கிய பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படும்.
புதிய பாடத்திட்டத்தின்படி, தொடக்கப்பாடசாலைகள், சீன கம்யூனிஸ்டு கட்சிமற்றும் சோசலிசம் மீதான அன்பை வளர்ப்பதில் கவனம் செலுத்தும். நடுநிலை பாடசாலைகள், அடிப்படை அரசியல் தீர்ப்புகளையும் கருத்துக்களையும் உருவாக்க மாணவர்களுக்கு உதவ, புலனுணர்வு அனுபவம் மற்றும் படிப்பறிவு ஆகியவற்றின் கலவையில் கவனம் செலுத்தப்படும்.
கல்லூரிகளில், தத்துவார்த்த சிந்தனையை நிறுவுவதற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜின்பிங் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங்கிற்கு பிறகு மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக அறியப்படுவதுடன், தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவியில் நீடிக்கும் ஜின்பிங் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.