ஈரான் போரின் எதிரொலி! ஆபிரிக்க நாடுகளுக்கு சீன ஜனாதிபதி அறிவித்த உறுதிமொழி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுடன் மேற்கொண்டுள்ள போரினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்கில் மொசாம்பிக் ஜனாதிபதி டேனியல் சாப்போவைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் மே மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், வெளிநாட்டுத் தலைவர்களுடனான தொடர் சந்திப்புகளை ஷி ஜின்பிங் முன்னெடுத்து வருகிறார்.
பொருளாதாரப் பாதிப்பு
மத்திய கிழக்கில் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் விளைவாக எரிபொருள், உணவு மற்றும் உரம் போன்ற இறக்குமதிகளைப் பெரிதும் நம்பியிருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் கடுமையான பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.

Image Credit: CNN
இந்த நிலையில், ஈரான் போரின் தாக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் எதிரொலிப்பதை ஏற்றுக்கொண்ட ஷி ஜின்பிங், அமைதியை நிலைநாட்டவும் வளர்ச்சியைத் தொடரவும் ஆப்பிரிக்க நாடுகளுடன் கைகோர்த்துச் செயல்பட சீனா தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
பூஜ்ஜிய வரி
இதன் ஒரு பகுதியாக, 53 ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மே 1 முதல் பூஜ்ஜிய வரி (Zero-tariff) திட்டத்தை நடைமுறைப்படுத்த போவதாக பெய்ஜிங் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தைவானுடன் இராஜதந்திர உறவைப் பேணும் ஈஸ்வதினி (Eswatini) நாடு மட்டும் இந்த வரிச் சலுகை திட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |