நிமிடத்திற்கு 700 பேருக்கு தொற்று தினசரி 5000 பேர் பலி சீனாவில் ருத்ர தாண்டவமாடும் கொரோனா
புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், உலகெங்கும் கொரோனா பரவல் குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் ஒவ்வொரு நாளும் 10 இலட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், தினசரி 5,000 பேர் வரை கொரோனாவால் உயிரிழக்கிறார்கள். சீனா கொரோனா பரவல் குறித்த அதிகாரபூர்வ தரவுகள் வெளியிடத் தயக்கம் காட்டுகிறது. இருப்பினும், உலகில் இதுவரை ஏற்பட்ட அலைகளில் இது மோசமானதாக இருப்பதால், இந்தளவுக்கு வைரஸ் பாதிப்பு இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
நிலைமை இன்னும் மோசமாகலாம்
140 கோடி பேர் வாழும் சீனாவில் நிலைமை இன்னும் கூட மோசமாகலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த அலையில் வரும் ஜனவரி மாதம் அங்கு மேலும் அதிகரிக்கும் என்றும் தினசரி பாதிப்பு 37 இலட்சம் வரை செல்லும் என்றும் லண்டன் ஏர்ஃபினிட்டி லிமிடெட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்தே அதன் பரவலைத் துல்லியமாகக் கணித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகும் கூட சீனாவில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் வரும் மார்ச் மாதம் இது அதிகபட்சமாகத் தினசரி 42 இலட்சம் வரை செல்லும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜீரோ கொவிட் கொள்கை
சீனாவில் நடைமுறையில்ல் இருந்த ஜீரோ கொவிட் கொள்கை திடீரென நீக்கப்பட்டதே வைரஸ் பாதிப்பு இந்தளவுக்கு அதிகரிக்க முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது. ஜீரோ கொவிட் கொள்கை காரணமாக அங்கு பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு இதுவரை ஏற்படாமல் இருந்தது. இதனால் அவர்களுக்கு தடுப்பாற்றலும் இல்லாமல் இருந்தது. இப்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட உடன் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
அதேபோல சீனாவில் அவர்களின் சினோவார்ம் மற்றும் சினவோக் வக்சின் தான் அளிக்கப்பட்டது. அதன் தடுப்பாற்றலும் மிகக் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு
சீனா கடந்த புதன்கிழமை தனது நாட்டில் ஒட்டுமொத்தமாகவே 2,966 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளதாகக் கூறியுள்ளது. இருப்பினும், இதை வல்லுநர்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை. அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்துமே நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அங்குள்ள மயானங்களிலும் உடல்கள் அணிவகுத்து நிற்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அரசு அறிவிக்கும் தகவல்களைக் காட்டிலும் உண்மையில் கொரோனா பாதிப்பு பல மடங்கு இருக்கும் என்றே வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
