சீனா மீதான அணு ஆயுதக் குற்றச்சாட்டு...! அமெரிக்காவிற்கு கொடுக்கப்பட்ட பதிலடி
கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர் சீனா ரகசிய அணு ஆயுதச் சோதனையை நடத்தியதாக அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டைச் சீனா மறுத்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய - சீன எல்லை மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சில நாட்களிலேயே, சீனா இந்த ரகசியச் சோதனையை முன்னெடுத்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜெனீவா ஆயுதக் குறைப்பு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்கத் துணைச் செயலாளர் தாமஸ் டினானோ, இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
சர்வதேசக் கண்காணிப்பு
மேலும் தெரிவித்த அவர், சர்வதேசக் கண்காணிப்பு அமைப்புகளைத் தவிர்க்கும் நுட்பங்களைப் பயன்படுத்திச் சீனா தனது அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளை மறைக்க முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான “புதிய START” அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் காலாவதியாகியுள்ள நிலையில், இக்குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2030ஆம் ஆண்டுக்குள் சீனாவிடம் 1,000 இற்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருக்கும் என அமெரிக்கா கணித்துள்ள நிலையில், சர்வதேச ஒப்பந்தங்களைச் சீன ராணுவம் மீறுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகமான ஆயுதங்கள்
இந்தக் குற்றச்சாட்டுகளைச் சீனத் தூதர் ஷென் ஜியான் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, அமெரிக்கா வேண்டுமென்றே அச்சுறுத்தல்களை மிகைப்படுத்தி வருவதாகவும், ஆயுதப் போட்டியில் அமெரிக்காவே மிகப்பெரிய குற்றவாளி என அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தங்களிடம் சுமார் 600 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் தலா 4,000-இற்கும் அதிகமான ஆயுதங்கள் உள்ள நிலையில் புதிய பேச்சுவார்த்தைகளில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை எனவும் சீனா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |