சீனாவுக்கு இலங்கை புகழாரம்!
பௌத்தம், வர்த்தகம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் உலகளாவிய இணைப்பு உள்ளிட்ட பல வழிகளில் வரலாற்று ரீதியாக, சீனா இலங்கையின் நட்பு நாடாக இருந்து வருகின்றது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்த சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஃபெங் தலைமையிலான சீனத் தூதுக்குழுவுக்கும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையேயான, இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடல் கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் இன்று (ஏப்ரல் 28) நடைபெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்த கமல் குணரத்ன,
அண்மையில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது சீன அரசாங்கம் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் இராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெனரல் ஃபெங், நடைமுறைச் சாத்தியமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கையுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தை பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இலங்கை சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமும் மாணவர் சங்கத்தின் தலைவரும், ஸ்தாபக உறுப்பினருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) விஜித ரவிப்பிரிய ஆகியோரின் அழைப்பின் பேரில் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஃபெங் மேற்படி இணையதளத்தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
உயர்மட்ட சீன பாதுகாப்பு தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒர் அங்கமாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உதவிகள் தொடர்பான ஆவணங்களிலும் கைச்சாத்திடப்பட்டன.
மேலும் இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர், முப்படை தளபதிகள் மற்றும் சீன தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிவந்த ஜெனரல் ஃபெங் ஆகியோருக்கிடையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

