இலங்கையிலிருந்து குரங்குகளை வாங்கும் ஆர்வத்தை கைவிடாத சீனா
இலங்கையில் இருந்து குரங்குகளை பெற்றுக்கொள்வதில் சீனா இன்னும் ஆர்வமாக இருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று (ஜன 09) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் அமரவீர, தனது சமீபத்திய சீன விஜயத்தின் போது,சீனாவின் தனியார் மிருகக்காட்சிசாலை நிறுவனங்கள் இலங்கை டோக் மக்காக் குரங்குகளைப் பெறுவதற்கான நம்பிக்கையை வெளியிட்டதாக தெரிவித்தார்.
இலங்கை குரங்குகளை வாங்கும் ஆவலில் சீன நிறுவனங்கள்
“தனியார் சீன மிருகக்காட்சிசாலை நிறுவனங்கள் இன்னும் கண்காட்சி நோக்கங்களுக்காக இலங்கை குரங்குகளைப் பெறுவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
சீனாவில் சுமார் 20,000 தனியார் உயிரியல் பூங்காக்கள் உள்ளன. இருப்பினும், விலங்கு ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளின் நடவடிக்கைகளால் எங்களால் அது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியவில்லை'' என்றார்.
இலங்கை குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வருடாந்தம் நாசமாகும் பயிர்கள்
வருடத்திற்கு ஏறக்குறைய 700 மில்லியன் தேங்காய்கள் உட்பட பயிர்கள் அழிவதற்கு குரங்குகள் முக்கிய காரணம் என்று வலியுறுத்திய அமைச்சர் அமரவீர, பயிர் அழிவை நிவர்த்தி செய்வதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் இப்போது ஆராய வேண்டும் என்றார்.
சில வன விலங்குகளால் பயிர்களை நாசமாக்குவதற்கு தீர்வை வழங்குமாறு பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு அமைச்சுகளுக்கு அமைச்சர் வேண்டுகோளையும் விடுத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |