அமெரிக்காவுக்கு சீனா கடுமையான எச்சரிக்கை
சீனா தாக்குதலை மேற்கொண்டால், தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்த கருத்துக்கு சீனா கடும் தொனியில் எதிர்வினையாற்றியுள்ளது.
தாய்வான் தொடர்பான விவகாரத்தை கவனமாகவும் சரியாகவும் கையாளுமாறு கூறியுள்ள சீனா, சுதந்திரம் கோரும் பிரிவினைவாத சக்திகளுக்கு "தவறான சமிக்ஞைகளை" அனுப்ப வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளது.
சீன - அமெரிக்க உறவுகளை மாத்திரமல்லாமல், தாய்வான் நீரிணை பகுதியின் அமைதிக்கும் பங்கம் விளைவிக்க வேண்டாம் என அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது.
தாய்வான் முரண்பாடு
அமெரிக்காவின் சி.பி.எஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் அமெரிக்க படையினர், தாய்வானை பாதுகாப்பார்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜோ பைடன், முன்நிகழ்ந்திருந்திராத தாக்குதலை மேற்கொண்டால் தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும் எனக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என வெள்ளை மாளிகையும் கூறியுள்ளது. குறிப்பாக ஒரே சீனக் கொள்கையான, தாய்வான் சீனாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்வதாக அமெரிக்கா கூறியுள்ள போதிலும் தன்னை தானே பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் தாய்வானுக்கு இருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் சீனாவை விட நெருக்கமான உறவுகளை தாய்வானுடன் பேணிவரும் அமெரிக்கா, ஆயுதங்களையும் ஏற்றுமதி செய்துவருகின்றது.
இந்த நிலையில் ஜோ பைடனின் கருத்துக்கள் குறித்து கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சு, தேசத்தை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள சீனாவுக்கு உரிமை உள்ளது எனக் கூறியுள்ளது.
சீனாவின் நிலைப்பாடு
அமைதியான வழியிலான ஒருங்கிணைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் சீனா மேற்கொள்ளும் அதேவேளை, பிரிவினையை இலக்காகக் கொண்ட எந்த நடவடிக்கைகளையும் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் கூறியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க அதிபரின் கருத்துக்களுக்கு பதில் அளித்துள்ள தாய்வான், தமது நாட்டிற்கான அமெரிக்காவின் திடமான பாதுகாப்பு உறுதிப்பாட்டை வரவேற்பதாக கூறியுள்ளது.
வொஷிங்டனுடனான நெருக்கமான பாதுகாப்புக் கூட்டாண்மையை தொடர்ந்தும் ஆழப்படுத்துவதாகவும் தாய்வான் குறிப்பிட்டுள்ளது.