சிறிலங்கா காவல்துறையை நவீனப்படுத்த முன்வந்தது சீனா
இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே இன்று (நவம்பர் 24) கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை காவல்துறை அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதற்கும், காவல்துறையின் உட்கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்கும் சீனா ஆதரவளிக்கவுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் இன்று காலை காவல்துறை தலைமையகத்தில், இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங் (Wei Huaxiang) மற்றும் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு இடையே கையெழுத்தானது.
ஒப்பந்தம் கைச்சாத்து
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் புதிய வகை குற்றச் செயல்களைப் புரிந்துகொள்ளவும், அத்தகைய குற்றங்களுக்கு எதிராகச் சட்டத்தை இன்னும் திறம்பட நடைமுறைப்படுத்தவும் இலங்கை காவல்துறை அதிகாரிகளின் திறனை இந்த உதவி வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்த கையெழுத்திடும் நிகழ்வில், காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, காவல்துறை நிர்வாகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, இலங்கை காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |