விண்வெளியில் விவசாயம் : சீன ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு
ஒவ்வொரு நாடும் விண்வெளி ஆய்வுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றது.
தற்போதைய நிலையில் விண்வெளி துறை தொடர்பான ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா முன்னிலையில் உள்ளன.
இதுதவிர பிற நாடுகளும் கிரக ஆய்வில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.
சீனா தனக்கென்று தனியாக விண்வெளியில் டியாங்காங் விண்வெளி மையத்தை அமைத்துள்ளது.
ஷென்சோ-16 விண்கலம்
இந்நிலையில் மே மாதம் 30ம் திகதி ஜியுகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து ஷென்சோ-16 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இதில் மொத்தம் 3 பேர் பயணம் செய்தனர். விண்வெளி வீரர்களான ஜிங் ஹைபெங், ஜு யாங்சு மற்றும் சீனா ஏரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான குய் ஹைச்சாவோ ஆகியோர் விண்கலத்தில் பயணித்தனர்.
இவர்களது முயற்சியினால், விண்வெளி மையத்திலேயே அவர்கள் கீரை, சின்ன வெங்காயம், செர்ரி தக்காளி செடிகளை வளர்க்க தொடங்கினர்.
பூமியில் தேவையான சூரியவெளிச்சம், தண்ணீர் இருப்பதால் செடிகள் எளிதில் வளரும். ஆனால் விண்வெளி மையத்தில் செடிகள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
சிறப்பு ஏற்பாடுகள்
இதனால் சிறப்பு ஏற்பாடுகளை சீனா செய்திருந்தது.
அதாவது செடிகளை பயிரிடுவதற்கான சிறப்பு சாதனத்தை சீனா உருவாக்கியது. இது தாவரங்கள் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது.
தாவர வளர்ச்சிக்கு தேவையான வெப்பநிலை, ஈரப்பதம், ஆக்சிஜன், கார்பன் டை-ஆக்சைடு உள்ளிட்டவை சரியான அளவில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இம்முறைமைகளின் வாயிலாக, சீனா விண்வெளி வீரர்கள் செடிகளை பயிரிட்டு வெற்றி கண்டுள்ளனர்.
அதன்படி அவர்கள் பயிரிட்ட கீரை, செர்ரி, தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவை நன்கு வளர்ந்ததையடுத்து, அவர்கள் அறுவடை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.