இலங்கையில் சீன கப்பல் - இந்தியா எடுத்த உடனடி நடவடிக்கை
இலங்கையில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல்
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் யுவான் வாங்க் 5 நேற்றையதினம் நங்கூரமிட்டதை அடுத்து இந்தியாவின் தமிழகம் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு என்றுமில்லாவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
குறிப்பாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடிஉள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 8 கப்பல்களும், 2 விமானம், 3 ஹெலிகொப்டர்கள் உள்ளிட்டவை இடைவிடாத ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இலங்கை கடல் பகுதியில் இருந்து சந்தேகத்துக்கிடமான படகுகள் நடமாட்டம் உள்ளதா? அகதி என்ற போர்வையில் எவரும் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக, கீழக்கரை கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ராடர் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்
இலங்கையில் சீன கப்பல் நின்றபடி, இந்தியாவின் பாதுகாப்பு இரகசியங்களை சேகரித்து செல்வது, இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே வந்த உளவு கப்பல்
சீன தூதர் ஜி ஜெங்காங் ஹம்பாந்தோட்டையில் நிருபர்களிடம் தெரிவிக்கையில், இதுபோன்ற உளவு கப்பல்கள் வருவது இயல்புதான். கடந்த 2014-ம் ஆண்டு ஒரு உளவு கப்பல் வந்துள்ளது. இந்தியாவின் எதிர்ப்பு குறித்து இந்திய நண்பர்களிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.
மூன்றாவது நாடு தடுக்கக் கூடாது - சீனா பதிலடி
இந்த கப்பலால் எந்த நாட்டுக்கும் பாதிப்பு வராது என்று சீனா கூறியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது:- இலங்கையின் தீவிர ஒத்துழைப்புடன் 'யுவான் வாங்-5' கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வெற்றிகரமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அதிபரின் பிரதிநிதி, 10-க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்கள், சமுதாய தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கப்பல் எரிபொருளை நிரப்பிச்செல்ல சிறிது காலம் ஆகும். யுவான் வாங்-5 கப்பலின் கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகள், சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச நடைமுறைக்கு ஏற்ப இருக்கும். அதன் செயல்பாடுகள், எந்த நாட்டின் பாதுகாப்புக்கும், பொருளாதார நலன்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது. எனவே, எந்த மூன்றாவது நாடும் அதை தடுக்கக்கூடாது.
தொடர்புடைய செய்தி
மிரட்ட வைக்கும் சீன கப்பலின் அதி நவீன தொழில்நுட்பங்கள்! இந்திய தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட சிக்கல் |
சீனக்கப்பலின் வருகைக்கு பதிலடி..! இலங்கை வந்தடைந்தது இந்தியாவின் உளவு விமானம் |
கொதிநிலையில் சீன கப்பல் விவகாரம்..! சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கும் உளவு விமானம் |