மீண்டும் சர்ச்சையை கிளப்ப சிறிலங்கா வரும் மற்றொரு கப்பல் - சீனாவால் சீற்றமடைந்த இந்தியா
மற்றொரு சீன கடல் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று ஒக்டோபர் மாதத்திற்குள் இலங்கையின் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் நிறுத்தப்படும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷி யான் 6 என்ற குறித்த கப்பலானது இலங்கை வருவதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஷி யான் 6, கணிசமான 3,999 தொன்கள் எடை கொண்டது எனவும் குவாங்சோவில் இருந்து புறப்பட்டு, தென் சீனக் கடலூடாக தற்போது தெற்கு திசையில் பயணிக்கிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கவலை வெளியிட்டு வரும் இந்தியா, இந்த விவகாரத்தை உச்ச மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
எனினும் இந்திய அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதனையும் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாரா வெளியிட்ட காரணம்

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நாரா நிறுவனம் (The National Aquatic Resources Research and Development Agency), இலங்கையில் உள்ள ருஹுனு பல்கலைக்கழகத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த கப்பலின் வருகை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாரா நிறுவன அதிகாரிகள், தங்கள் சொந்த ஆராய்ச்சிக்காக நீர் மாதிரிகளை எடுக்க கப்பலில் இணைவார்கள் என்று கூறியுள்ள நிலையில், இந்த ஆய்வு நடவடிக்கைகள் தெற்கு கடற்கரையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பல் கொரோனா தொற்றுநோய்க்கு முன்பே இலங்கைக்கு வரவிருந்ததாகவும், அது பல முறை தாமதமாகியதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யுவான் வாங் 5

மேலும், இது இந்தியாவுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது என நம்புவதாக நாரா மேலும் கூறியுள்ளது.
இந்த நிலையில் கடந்த வருடம் ஓகஸ்ட் 2022 இல், யுவான் வாங் 5 என அழைக்கப்படும் சீன உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டமை பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.