மற்றுமொரு சீனக்கப்பல் சர்ச்சை: இல்லையென மறுக்கும் வெளிவிகார அமைச்சு
இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளையும் மீறி, சிறிலங்கா கடற்பரப்புக்குள் சீன கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 அண்மையில் ஆராய்ச்சிகளை முன்னெடுத்திருந்த நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் மற்றுமொரு சீன கப்பல் இலங்கைக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த கப்பல் தொடர்பான எந்தவொரு தகவலும் தமக்கு தெரியாதென சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கபில பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் விசேட பொருளாதார வலயத்தில் சீனாவின் அதிநவீன ஆராய்ச்சி கப்பல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
கப்பலுக்கான அனுமதி
இதற்கமைய, சீனாவின் சியாங் யாங் கொங் 3 எனப்படும் கப்பல் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இலங்கையில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஐ.பி.சி தமிழ் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கபில பொன்சேகாவிடம் வினவியது.
இதற்கு பதிலளிக்க மறுத்த கபில பொன்சேகா, சீனாவின் சியாங் யாங் கொங் 3 கப்பல் பற்றிய தகவல்கள் ஏதும் தமக்கு தெரியாதென தெரிவித்தார்.
அத்துடன், இது தொடர்பான விடயங்களை வேறு தரப்பினரிடம் கேட்டறிந்து கொள்ளுமாறும், ஊடகங்களுக்கு வழங்க தம்மிடம் எந்தவொரு தகவலும் இல்லையெனவும் அவர் கூறினார்.