மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் கோமாவில் இருந்த கணவரை மீட்டெடுத்த சீன பெண்
மருத்துவர்களே நம்பிக்கை இழந்த நிலையில், கோமாவில் இருந்த தனது கணவரை ஐந்து ஆண்டுகாலத் தொடர் பராமரிப்பின் மூலம் மீண்டும் சுயநினைவுக்குக் கொண்டுவந்த சீனப் பெண்ணின் நெகிழ்ச்சியான சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த ஜாவோ என்பவர், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஆபத்தில் சிக்கிய மூன்று வயதுக் குழந்தையைக் காப்பாற்ற முயன்றபோது, கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து தவறி விழுந்துள்ளார்.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவர் கோமா நிலைக்குச் சென்றார்.
ஐந்து ஆண்டுகள்
ஜாவோவுக்கு மீண்டும் சுயநினைவு திரும்புவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும், அவரைத் தொடர்ந்து பராமரிப்பது கடினம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், கணவர் மீதான அன்பும் நம்பிக்கையும் காரணமாக அவரது மனைவி சாங்மெய் மனம் தளரவில்லை.
தினமும் கணவரின் அருகில் இருந்து அவரைப் பராமரித்து வந்துள்ளார்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி கணவருக்கு மசாஜ் செய்ததுடன், அவருக்கு அருகில் அமர்ந்து பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டும் தொடர்ந்து கவனித்து வந்துள்ளார்.
இவ்வாறு ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொண்ட பராமரிப்பின் பின்னர், ஜாவோவின் உடலில் அசைவுகள் தென்படத் தொடங்கியுள்ளன.
தற்போது கண் விழித்து மனைவியைப் பார்த்துப் பேசும் அளவுக்கு அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |