புடின் தொடர்பில் அமெரிக்க புலனாய்வு நிறுவனம் வெளியிட்ட தகவல்
புடினுக்கு உடல் நலக்குறைவா
ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின், சுகவீனமுற்றுள்ளதாக வெளிவந்த தகவல்களை அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனம் முதல்முறையாக மறுத்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத ஊடக ஊகங்கள் அதிகரித்துள்ள பின்னணியில் புலனாய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் வில்லியம் பேர்ன்ஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் 70 வயதை தொட்டுள்ள நிலையில், அவர் உடல் ரீதியாக நிலையற்று இருப்பதாகவும் மோசமான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை எனவும் அவர் மிக ஆரோக்கியமாக இருப்பதாகவே தோன்றுகின்றது எனவும் நகைச்சுவையாக கூறியுள்ளார்.
உக்ரைன் போர்
உக்ரைனுக்கு நீண்ட தூர வீச்சுக் கொண்ட அதிகமான ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், வில்லியம் பேர்ன்ஸ் இன் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
முன்னதாக கருத்து வெளியிட்ட ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோ, உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தை தாண்டி, ஏனைய பகுதிகளில் தமது படை நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக கூறியிருந்தார்.
உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் ஆயுதங்களை தொடர்ச்சியாக வழங்கிவரும் நிலையில், ரஷ்யாவின் மூலோபாயங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
