தாயகப் பகுதிகளில் புலனாய்வாளர்கள் ஊடறுப்பு
மீண்டும் விடுதலைப்புலிகள் அமைப்பை கட்டியெழுப்ப போகின்றார்கள் என்று பூச்சாண்டி காட்டுகின்ற பிழையான தரவுகள் அரச பாதுகாப்பு பிரிவால் வழங்கப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாங்கள் ஒரு சிறு ஆர்ப்பாட்டத்தையோ அல்லது எதிர்ப்பினையோ காட்டுவதற்கு முற்படுகின்ற போது அங்கு வந்திருக்கும் புலனாய்வு பிரிவினரை எண்ணிப்பார்க்கும் போது, அளவிற்கு அதிகமானோராக களமிறக்கப்பட்டிருக்கும்.
சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் கருவிகளாக புலனாய்வு பிரிவினர், காவல்துறையினர், இராணுவத்தினர் கையாளப்படுகின்றனர்” என்றார்.
இலங்கை அரச கட்டமைப்பிலுள்ள அத்தனை புலனாய்வாளர்களும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தானா தற்போது களமிறக்கப்பட்டுள்ளார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
அது உண்மையான விடயம். ஏனென்றால் இன ஒடுக்குமுறை. போராட்ட சூழ்நிலை வடக்கு, கிழக்கில் தான் கடந்த காலங்களில் காணப்பட்டது அல்லது அடிபணியாத குணாம்சம் காணப்பட்டது.
எங்கள் நிலத்தில் நாங்கள் கௌரவமாக மரியாதையாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட்டதன் காரணமாக, சுயநிர்ணயம் மற்றும் சுயகௌரவம் என்ற வகையில் செயற்பட்டதன் காரணமாக, இவர்களை எப்படியாவது அடக்கி ஒடுக்கி அவர்களின் முனைப்பான செயற்பாடுகளை ஒரு அடிமைத்துவ நிலைக்கு மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அவர்கள் செயற்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
