துமிந்த சில்வாவை கைது செய்ய வைத்தியசாலையில் குவிந்த குற்ற புலனாய்வுப்பிரிவு
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா, அரச தலைவரின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட போதிலும், உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் பொதுமன்னிப்பை இடைநிறுத்தி அவரை கைது செய்ய உத்தரவிட்டதையடுத்து, அவரைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்டு நாடு திரும்பிய அவர் வழமை போன்று ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நேற்றைய தினம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னர், துமிந்த சில்வாவை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபர், காவல்துறை மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
அத்துடன் துமிந்த சில்வாவைத் தேடி உடனடியாக கைது செய்யுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதன்படி விசாரணை முடியும் வரை துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

