கண்டி குண்டு வெடிப்பு அச்சுறுத்தல் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
புதிய இணைப்பு
கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு வெடிப்பு மிரட்டல் விடுத்த இரண்டு மின்னஞ்சல்கள் தெற்காசிய நாடொன்றில் இருந்து அதன் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
முதலாம் இணைப்பு
கண்டி மாவட்ட செயலகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு குண்டு வெடிப்பு நடக்கப்போவதாக அனுப்பப்பட்ட இரண்டு மின்னஞ்சல்கள் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறை புலனாய்வுப் பிரிவுகளாலும் பல அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்துக்கிடமான குறித்த மின்னஞ்சல் 23 ஆம் திகதி வந்திருந்ததாகவும் எனினும், அது தொடர்பாக மாவட்டச் செயலாளருக்கு 26 ஆம் திகதி காலையே அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சோதனை
இதன்படி, மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த மத்திய மாகாண டி.ஐ.ஜி சுதத் மாசிங்கவிடம் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, அலுவலக வளாகம் உடனடியாக வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு, காவல்துறை மோப்ப நாய் பிரிவு மற்றும் காவல்துறை சிறப்புப் படையினரால் சோதனை செய்யப்பட்டது.

அந்த நேரத்தில் மாவட்டச் செயலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பின்னர், தொடர்புடைய தகவல் தவறானது என்று காவல்துறையினரும் அறிக்கை அளித்தனர்.
பின்னர், மாவட்டச் செயலகம் தனது தினசரி பணிகளை மீண்டும் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள், மாவட்டச் செயலகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு மாலை 4:00 மணிக்கு முன்னர் வளாகத்தில் வெடிப்பு ஏற்படவிருப்பதாக மற்றொரு மின்னஞ்சல் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |