கொழும்பில் 49 நிமிடங்களில் கொட்டித்தீர்த்த மழை : வெளியான காரணம்
கொழும்பில் நேற்று (06) மாலை எந்தவித தீவிர வளிமண்டல நிலைமைகளும் இல்லாமல் குறுகிய நேரத்தில் கனமழை பெய்தமையானது மேக வெடிப்பு அல்லது முகிற்பேழ் மழை என அழைக்கப்படும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறைப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 49 நிமிடங்களில் 120 மில்லி மீற்றர் மழை கிடைத்துள்ளமையால் கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து நாகமுத்து பிரதீபராஜா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் மேக வெடிப்பு என்றால் என்ன என்பது பற்றி இவ்வாறு விளக்கியுள்ளார்.
அதிக மழைவீழ்ச்சி
குறுகிய நிலப்பரப்பில் அதாவது 20 முதல் 30 சதுர கிலோமீற்றர் பரப்பளவில், ஒரு மணி நேரத்திற்கு 100 மில்லிமீற்றருக்கும் (10 செ.மீ) அதிகமாக மழை கிடைக்கும் போது மேக வெடிப்பு என வரையறுக்கப்படுகிறது.
மிக மிகக் கன மழை சில நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நீடிக்கும்.

வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிகுந்த காற்று மேல்நோக்கிச் செல்லும்போது (Orographic lift), அங்கே கார் திரள் கார்முகில்கள் (Cumulonimbus Clouds) உருவாகின்றன.
லங்முயிர் விளைவு (Langmuir Effect) கோட்பாட்டின் படி மேகத்தில் உள்ள நீர்த்துளிகள் மேலெழும் வெப்பக் காற்றால் கீழே விழாமல் தடுத்து நிறுத்தப்பட்டு, ஒன்றோடு ஒன்று இணைந்து பெரிய நீர்த்துளிகளாக மாறுகின்றன.
வெள்ள அனர்த்தம்
திடீரென மேல்நோக்கி வீசும் காற்று பலவீனமடையும் போது, மேகத்தில் தேங்கியுள்ள அத்தனை நீரும் ஈர்ப்பு விசையால் ஒரே நேரத்தில் கவிழ்த்து ஊற்றியது போல (அருவி போல்) கொட்டிவிடுகிறது.
குறுகிய நேரத்தில் கிடைக்கும் இந்த மழை வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும்.
இந்த மேக வெடிப்பு மழை மலைப்பாங்கான பகுதியில் நிகழும்போது பெரும் நிலச்சரிவு நிகழ்வுகள் ஏற்படுவதுண்டு.
ஒரே இடத்தில் மீண்டும் சில நாட்கள் இடைவெளியில் மேக வெடிப்பு நிகழாது. ஆனால் மேக வெடிப்பு நிகழ்ந்ததன் பின் அந்த இடத்தில் ஒன்றிரண்டு நாட்களுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |