இரவில் பிரேத பரிசோதனை செய்ய முக்கிய காரணம் இதுதான் - வாய் திறந்த மு.க.ஸ்டாலின்
கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்களை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு வசதி இல்லாத காரணத்தினால் அன்றைய இரவில் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டதாக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தமிழ்நாடு அரசு சட்டப்படி விரைந்து கையாண்டது. நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்கையிலேயெ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கூட்ட நெரிசலுக்கு காரணம்
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கரூர் பிரசாரத்திற்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது. கரூர் பரப்புரைக்கு தவெக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட 12 மணியைக் கடந்து 7 மணிநேரம் தாமதமாக தவெக தலைவர் வந்துள்ளார்.
இதுதான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம். கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கரூர் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் போதிய ஏற்பாடுகளை செய்ய தவறி விட்டனர்.
அதே இடத்தில் 2 தினங்களுக்கு முன்பு அதிமுக நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தனர். கட்டுப்பாட்டோடு நடந்துக் கொண்டனர். இதற்கு நேர்மாறாக தவெக கூட்டத்தில் நடந்துள்ளது.
கூடுதல் மருத்துவக் குழுக்கள்
கரூரில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் அறிந்த உடனேயே, என்ற தகவல் அறிந்த உடனேயே, தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட முதல் நபர் இரவு 7.47 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு கொண்டுவரப்பட்டனர்.
அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிப்பதற்காக சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோயம்புத்தூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து 152 மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் வந்து பணியில் ஈடுபட்டனர்.
பொது சுகாதார இயக்குநர் தலைமையில் கூடுதல் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
கரூர் மருத்துவமனையில் 700 படுக்கைகள் இருந்தாலும், கூடுதல் 400 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. 24 மணி நேர அவசர சிகிச்சை, சிடி ஸ்கேன், ஆய்வகங்கள் செயல்பட்டன.
இரவில் உடற்கூராய்வு
கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில், இறந்த அனைத்து உடல்களையும்,குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால், அன்றைய இரவில் உடற்கூராய்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறப்பு அனுமதி பெற்று உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அனுமதியின்படி, உயிரிழந்தவர்களை பிரேதப் பரிசோதனை செய்திட கரூர் அரசு மருத்துவக் கல்லூரி தடயவியல் துறைத் தலைவர் மரு.சங்கர் தலைமையில் 24 மருத்துவர்கள் மற்றும் 16 உதவிப் பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைகள் / உடற்கூராய்வு செய்யப்பட்டது.
28.09.2025 அன்று அதிகாலை 1.45 மணிக்கு முதல் உடற்கூராய்வு துவங்கப்பட்டு 28.09.2025 அன்று மதியம் 1.10 மணியளவில் 39-வது உடற்கூராய்வு முடிவுற்றது என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
