கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி - இருவர் காயம்
பேருந்து ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் காலி - கொழும்பு பிரதான வீதியின் பயாகல, கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரும், சிறுவன் ஒருவருமே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பயாகல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிலைமை கவலைக்கிடம்
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, களுத்துறை கட்டுகுருந்த பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்த போது, எதிரே வந்த முச்சக்கரவண்டி திடீரென பேருந்தின் முன்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகும் காட்சி பேருந்தின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியிருந்தது.
முச்சக்கரவண்டி செலுத்தியவருக்கு நித்திரை
முச்சக்கரவண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பயணித்துள்ளதுடன், அவர்கள் காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் 62 வயதுடைய பாட்டியும் 12 வயதுடைய பேரனுமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் தாத்தாவே முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளதுடன், அவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஒரு பெண் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார். முச்சக்கரவண்டியை செலுத்தியவருக்கு நித்திரை ஏற்பட்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |