அரசின் செயற்பாடுகளால் அதிருப்தி - கொழும்பு பேராயர் காட்டமான அறிக்கை
கோட்டாபய - மஹிந்த தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை விடவும் ரணில் - மைத்திரி தலைமையிலான கடந்த அரசாங்கம் ஓரளவு மக்களுக்கு ஆறுதல் வழங்கியிருந்ததாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாடுகளால் பாரிய இன்னல்களை மக்கள் எதிர்நோக்கியுள்ள சூழலில், எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து பேராயர் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்திற்கு கடந்த ஆட்சிக்காலத்திலும் மறைமுக ஆதரவு வழங்கிவந்த கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை, தற்போது அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பகிரங்கமாக விமர்சித்து வருவதுடன், கடும் எதிர்ப்புக்களையும் வெளியிட்டு வருகின்றார்.
அதன் ஓரங்கமாக எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக அவர் நேற்று கடும் விமர்சனங்களையும் மறைமுக எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் வகையிலான ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை நேற்று அனுப்பியுள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தென்னிலங்கை கடற்பிரதேசத்தில் தீ விபத்துக்குள்ளாகி முழுக் கடல் வளத்திற்கும் பாரிய சேதத்தை விளைவித்துள்ளது.
அந்த அழிவு மற்றும் சேதங்களை பணத்தால் அளவிட முடியாது. இந்த நிலையில் எரிபொருள் விலையை அரசாங்கம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருப்பதானது மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டிய கதைக்கு உதாரணப்படுத்த முடியும் என்று கர்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த ரணில்-மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் மற்றும் அதற்கு முன் இருந்த ஆட்சியாளர்கள், எரிபொருள் விலையேற்றம் செய்திருந்தாலும் அதிகமாக பாதிக்கப்படுகின்ற மீனவர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணத்தை அளித்திருந்ததாகவும் கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வழியில் சென்று தற்போதைய ராஜபக்ச அரசாங்கமும் எரிபொருள் விலையேற்றத்திற்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.