ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதோடு மக்களையும் நெருக்கடிக்குள் தள்ளுகிறது அரசாங்கம்- அணி திரண்ட எதிர்க்கட்சி!
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அரசாங்கத்தின் ஒடுக்கு முறைக்கு எதிராக இன்று பத்தரமுல்லை, நாடாளுமன்றத்திற்கு முன்னால் சுகாதார வழிமுறைகளுக்கு இணங்க இந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கம் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்ய முயற்சிப்பதாகவும், மக்களை தொடர்ந்தும் நெருக்கடிக்குள் உள்ளாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு, பதாதைகளை ஏந்தியவாறு தற்போதைய அரசாங்கத்திற்கு எதிர்ப்பினை வெளியிட்டனர். இதன்போது, விவசாயிகள், மீனவர்கள், பெருந்தோட்டத்தொழிலாளர்கள், பொது மக்கள் என நாட்டின் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளமைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.




























