கொழும்புபோன்ற நகர்ப்புற வீடமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு: 2027இல் புதிய திட்டம்
2027ஆம் ஆண்டு புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் ரி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு உள்ளிட்ட ஏனைய நகர்ப்புறங்களில் நிலவும் வீடமைப்பு மற்றும் குடியிருப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய, நியாயமான விலையில் நவீன அடுக்குமாடிக் குடியிருப்புகளை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை
இதற்கமைய, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை (NHDA), தனியார் துறையுடன் இணைந்து புதிய வீடமைப்புத் தொகுதிகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்கான பொருத்தமான இடங்களை அடையாளம் காண்பதுடன், அபிவிருத்திப் பணிகளில் காணப்படும் சவால்களை ஆராயும் நோக்கில், பிரதி அமைச்சர் கொழும்பிலுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான தெமட்டகொட, ஆராமய வீதி மற்றும் மாளிகாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
மேலும், தெமட்டகொட ஜனசெவன வீடமைப்புத் தொகுதியில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |