நாடாளுமன்றில் இன்று அர்ச்சுனா எம்.பியால் ஏற்பட்ட சலசலப்பு
நாடாளுமன்றில் இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை நோக்கி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அர்ச்சுனா இராமநாதன், “ஆடு திருடர்களையும், போன் திருடர்களையும் சபையில் அமர வைத்துள்ள இந்த அரசாங்கம், குற்றவாளிகளை கூண்டிலிடுவதாகக் கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயம் அல்ல” எனக் குறிப்பிட்டார்.
யாழில் வெறும் கற்களை மட்டுமே நாட்டி வைத்துள்ள அனுர அரசு
அத்துடன், அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் வெறும் கற்களை மட்டுமே நாட்டி வைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், தமக்கு எதிராக கோப்பாய் காவல்துறையில் ஏதேனும் வழக்குகள் உள்ளனவா என்பது தொடர்பில் தெளிவுபடுத்துமாறு கோரிக்கை விடுத்தார். “எனக்கு எதிராக கோப்பாய் காவல்துறையில் வழக்குகள் ஏதேனும் இருந்தால் அதனை தெளிவுபடுத்தவும்.
இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடையில் அர்ச்சுனா! நாமலுக்கு ஒத்துழைப்பு என்ற கருத்தோடு வழங்கிய விளக்கம்
போலியான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம்
போலியான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம். அன்றைய ஆட்சியாளர்கள் போலியான விடயங்களை சோடித்து இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

எனவே, உண்மை நிலையைத் தெளிவாக அறிந்து கருத்துக்களை முன்வைக்கவும்” என இளங்குமரன் தெரிவித்தார். மேலும், குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“உங்களது திருட்டுக் கூட்டங்கள் முதலில் அந்த வழக்கின் உண்மைத்தன்மையை ஆராயுங்கள்” எனவும் இளங்குமரன் பதிலளித்தார்.
தினமும் பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கின்றார்
இதன்போது அர்ச்சுனா இராமநாதனின் கருத்துக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, “இவர் இப்படித்தான் தினமும் பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கின்றார்.

அதை நிறுத்துமாறு அவருக்கு தெளிவுபடுத்த வேண்டும். நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை மீறி நடந்துகொள்கின்றார். இவ்வாறு பொய்யான கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்க வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அர்ச்சுனா இராமநாதன், நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுமாறும், தாம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மைத்தன்மையை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
“நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுங்கள். குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகின்றேன். அப்படியானால் அனைவரும் பதவி விலகுவீர்களா?” எனவும் அர்ச்சுனா இராமநாதன் சவால் விடுத்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |