வடக்கு கிழக்கை மையமாகக் கொண்டு சுற்றுலா அபிவிருத்தி: அமைச்சரவை அனுமதி
வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களை மையமாகக் கொண்டு சமுதாய மட்ட சுற்றுலா அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையொழுத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, கொரியக் குடியரசின் 1.65 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியனுசரணையுடன் குறித்த திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது 21 தீர்மானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களை மையமாகக் கொண்டு சமுதாய மட்ட சுற்றுலா அபிவிருத்திக்கான முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கொரியாவின் சுற்றுலா நிறுவனம் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச பைக்கும் இடையிலான உடன்பாட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கடந்த ஜனவரி மாதம் அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
சுற்றுலா நிறுவனத்தின் பிரதிநிதிகள்
இதற்கமைய, குறித்த முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, கொரியாவின் சுற்றுலா நிறுவனத்தின் பிரதிநிதிகள் குறித்த மாகாணங்களுக்கு விஜயம் செய்த பின்னர் முன்னோடிக் கருத்திட்டத்திற்குப் பதிலாக திட்டமிட்டவாறு ஒட்டுமொத்த கருத்திட்டத்தையும் ஒரேதடவையில் ஆரம்பிப்பதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் இருதரப்பினருக்கும் இடையில் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் பற்றி சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் சமர்ப்பித்துள்ள விடயங்களுக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
இதேவேளை, யாழ் தீபகற்பத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் குடியிருப்போருக்கு மின்சாரம் வழங்குவதற்காக 11 மில்லியன் அமெரிக்க டொலர் பங்காள நிதியனுசரணையை அரசாங்கத்துக்கு வழங்க இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.
விலை மனு
இதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கமைய குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய ஒப்பந்ததாரர்களிடமிருந்து மட்டும் விலை மனு கோரப்பட்டுள்ளது.
இதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை மதிப்பீட்டுக்கு உட்படுத்தி அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த ஒப்பந்தத்தை யூ சோலர் எனப்படும் தனியார் நிறுவனத்துக்கு வழங்குவதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், பூநகரி குளத்திலிருந்து புதிய கிளிநொச்சி உப மின் நிலையம் வரை தேவையான மின்கடத்திக் கட்டமைப்பை நிர்மாணித்தல் உள்ளிட்ட 100 வீத மின்கல வலுசக்தி காப்புக் கட்டமைப்புடனான 700 மெகாவொட் சூரிய மின்சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக யுனைற்றட் சோலர் எனர்ஜி கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |