திருகோணமலையில் பௌத்த பிக்குகளை தாக்கிய காவல்துறை குழு மீது முறைப்பாடு!
திருகோணமலை சம்பவத்தில் பௌத்த பிக்குகளை தாக்கிய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் உள்ளிட்ட காவல்துறை குழுவினரை உடனடியாகக் கைது செய்யுமாறு காவல்துறை மா அதிபரிடம் இன்று (20.11.2025) எழுத்துப்பூர்வ முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் அமைப்பினால் குறித்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பப்பட்ட குறித்த முறைப்பாட்டு கடிதத்தில், கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள் : பொதுபாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
முறைப்பாடு
காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று விகாரையின் கம்பி வேலியைத் துண்டித்து அதற்குள் பலவந்தமாக நுழைந்துள்ளதுடன், பௌத்த பிக்குகளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்குத் தாக்கிவிட்டு புத்தர் சிலை ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

காவல்துறையினரின் இந்தச் செயலானது, 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டக்கோவை மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் சில பிரிவுகளை மீறும் செயல் எனவும், இது பிடியாணை இன்றி கைது செய்யக்கூடிய குற்றம் எனவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் பிரதிகள், காவல்துறை ஆணைக்குழு உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |