மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு : சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து நடவடிக்கை
சிறிலங்கா கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் அந்த சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளது.
இந்த தாக்குதல் சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது என அந்த சங்கத்தின் பிரதி இணைப்பாளர் ஜோசப் ஸ்ராலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சிறிலங்கா அரசாங்கத்தின் அடக்கு முறைகளை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாளைய ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில், ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கம் நாளை பாடசாலைகளுக்கு முன்பாக ஆரப்பாட்டமொன்றை நடத்த தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் நிறைவடைந்ததன் பின்னர், பிற்பகல் 1.30 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகும் எனவும் இதில் ஆசிரியர்கள், அதிபர்கள், பாடசாலைகளில் பணியாற்றுவோர், பெற்றோர், பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

அத்துடன், ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட கல்வித் துறையில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு தேவையான பணம், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படாவிட்டால், அடக்குமுறையை பொருட்படுத்தாது கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஜோசப் ஸ்ராலின் மேலும் எச்சரித்துள்ளார்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்