மகிந்த குடும்பத்தின் மீது அடுத்த முறைப்பாடு! சிக்கலுக்குள்ளாகியுள்ள நாமல் - ஷிரந்தி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ராஜபக்சர்களின் ஊழல் நடைமுறைகள், பண மோசடி மற்றும் சொத்து, பொறுப்புக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டை இலங்கையில் இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி நேற்று (22.09.2025) பதிவுசெய்திருந்தது.
அரசாங்க நிதி மோசடி
இதன்படி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்த கொழும்பு விஜேராம இல்லத்தை புனரமைப்பதற்காக அரசாங்க நிதியிலிருந்து 51,000 இலட்சத்தை செலவழித்தமை ஒழுங்கான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது இலங்கை ஜனநாயகத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பது தொடர்பில் முறையான விசாரணை வேண்டும் என கேரப்பட்டுள்ளது.
இதேவேளை, நாமல் ராஜபக்சவின் சொத்துக்கள் தொடர்பில் வழங்கியுள்ள தகவல்களின் உண்மைத்தன்மை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் பெயரில் கொழும்பு டொரிங்டன் வீதியில் வீடொன்று வாங்கப்பட்டுள்ளதாகவும், இது ஊழலான முறையில் வாங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் இருப்பதால் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி முறைப்பாடு வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
