அரசில் இணைந்துள்ள சுதந்திரக்கட்சி எம்.பிக்களுக்கு விதிக்கப்பட்டது நிபந்தனை
சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துள்ள குழுவினர் மீண்டும் கட்சியில் இணைந்தால் அமைச்சுப் பதவிகளை விட்டுக்கொடுக்க நேரிடும் என அக்கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது நல்ல விடயம் எனினும் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்டமையினால் அவர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியாது
மீண்டும் கட்சியில் இணைந்தால் அமைச்சுப் பதவிகளை விட்டுவிட்டு வர வேண்டும் எனவும், அரசாங்கத்தில் அங்கம் வகித்து கட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் ஜயசேகர தெரிவித்தார்.
குழுவுடனான கலந்துரையாடல்களை நல்லதொரு இடத்திற்குத் கொண்டு செல்ல முயற்சிப்பதாகத் தெரிவித்த ஜயசேகர, அதுவரை தற்போது நடத்தப்படும் ஒழுக்காற்று விசாரணை நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
அரசாங்கம் கொண்டு வரவுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு அப்பால் சென்று மக்களின் உரிமைகளை மீறுவதாக உள்ளதாகத் தெரிவித்த எம்.பி., அதற்காக பல திருத்தங்களை கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
