மன்னாரில் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் பதற்றம் : சபையில் பகிரங்கப்படுத்திய எம்.பி
மன்னார் (Mannar) மாவட்டத்தில் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் இன்று (19) காலை பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
இன்றைய (19.02.2025) நாடாளுமன்ற அமர்வின் போதே செல்வம் அடைக்கலநாதன் சபாநாயகரிடம் இந்த விடயத்தினை எடுத்துக் கூறினார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”மன்னாரில் கனியமண் அகழ்வு சம்பந்தமான முயற்சி நடைபெறுகின்றது. அதற்கு மக்கள் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கின்றனர்.
ஆனால் அங்கு நடைபெறும் கனிய மண் அகழ்விற்கு காவல்துறையினர் உடந்தையாக இருக்கின்றனர். இதனால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையில் கொந்தளிப்பு ஏற்படுகின்ற சூழ்நிலை இருக்கின்றது.
எனவே உடனடியாக அதனை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாட்டிற்கு வரமுடியும் என நினைக்கின்றேன் ” என தெரிவித்தார்.
இந்த நிலையில் இதற்குப் பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake), மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இந்த விடயங்கள் தொடர்பாக கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம் ஒன்று காணப்படுகின்றது.
குறித்த அனுமதிப் பத்திரமானது சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கின்றேன்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
