சுதந்திரக்கட்சிக்குள் வெடித்தது மோதல் -மைத்திரியின் செயலால் ஜயசேகர கடும் அதிருப்தி
ஹெட்டிபொலவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 72வது ஆண்டு மாநாட்டை கொழும்பில் நடத்த தீர்மானித்தமை கட்சிகளுக்குள் கருத்து மோதலை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
கட்சியின் வருடாந்த மாநாட்டை
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டை எதிர்வரும் 2ஆம் திகதி ஹெட்டிபொலவில் நடத்துவதற்கு முதலில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அந்த தீர்மானம் திடீரென மாற்றப்பட்டு அடுத்த மாதம் மூன்றாம் திகதி சிறி ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
ஹெட்டிபொலவில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்த மாநாடு திடீரென இரத்துச் செய்யப்பட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கொழும்பில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
இது தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில், கொழும்பு ஹெட்டிபொலவில் நடைபெறவிருந்த வருடாந்த மாநாட்டை நடத்துவதில் தனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேன தலைமையில்
வருடாந்த மாநாட்டை ஹெட்டிபொலவில் ஏற்பாடு செய்வதற்கு ஷான் விஜயலால் டி சில்வா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், அந்த குழு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரண்டு தடவைகள் கூடி கலந்துரையாடியதாக தெரிவித்தார்.
ஆண்டுவிழாவை ஹெட்டிபொலவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு, ஏற்பாட்டாளர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருந்தும் எவ்வித அறிவிப்பும் இன்றி இடம் மாற்றப்பட்டமை தமக்கு ஆச்சரியமளிப்பதாக அவர் கூறினார்.
கொள்கையற்ற கட்சி
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் விருப்பத்திற்கேற்ப மாநாடு இடம்மாற்றப்பட்டதாக தெரிவித்த அவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியில் உள்ளதா அல்லது அரசாங்கத்தில் உள்ளதா என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி கொள்கையற்ற கட்சியாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கொழும்பில் நடைபெறும் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றார்.