நாடாளுமன்ற ஆசனத்துக்காக தேரர்களிடையே மீண்டும் வெடிக்கவுள்ள மோதல்
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரருக்கும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் இடையே மீண்டும் மோதல் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஞானசார தேரர் இன்றைய தினம் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்காவில் 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தை எங்கள் மக்கள் சக்தி வென்றது. எனினும் அந்தக் கட்சி சார்பாக போட்டியிட்ட ரத்ன தேரர் மற்றும் ஞானசார தேரருக்கு இடையே பாரிய சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இறுதியாக 06 மாதங்களுக்கு ரத்ன தேரருக்கு ஆசனத்தை விட்டுக்கொடுக்க ஞானசார தேரர் இணங்கியிருந்தார்.
இதற்கமைய கடந்த ஜனவரி மாதத்தில் ரத்ன தேரர் எம்.பியாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார். ரத்ன தேரருக்காக 06 மாதங்கள் ஆசனத்தை வழங்கத் தயார் என்று ஞானசார தேரர் தெரிவித்ததன் பிரகாரம், அதன் கால எல்லை ஜுலை மாதம் 05ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.
எனினும் நாடாளுமன்றஉறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்க ரத்ன தேரர் தயக்கம் காண்பித்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் எம்.பி பதவியை ரத்ன தேரர் வாக்களித்தபடி தனக்கு வழங்காவிட்டால் கட்சி சார்பாக உறுப்பினர் இவர்தான் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்ப தீர்மானித்திருப்பதாக ஞானசார தேரர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு முன்பாக தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட எமது கட்சி சார்பாக ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனமே கிடைத்தது. இந்தத் தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பெற்ற அத்துரலியே ரத்ன தேரரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி எதிர்வரும் ஜுலை 05ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. 06 மாதத்திற்கே இவருக்கு எமது கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அளித்திருந்தோம். இதே அலுவலகத்தில் வைத்து இதற்கான இணக்கப்பாட்டினை அவருடன் நடத்தப்பட்ட பேச்சில் எட்டப்பட்டது.
எந்தவித ஒப்பந்தத்தையும் அன்று நாம் செய்துகொள்ளவில்லை. இந்த நிலையில் ஜுலை 05ஆம் திகதியுடன் அந்த ஒப்பந்தம் நிறைவுக்கு வருகின்ற நிலையில் ரத்ன தேரரே பதவியை எனக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். கட்சி எனக்கு நீதியை வழங்கும் என நம்புகின்றேன்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எமது கட்சி கடிதமொன்றை வழங்கி, அதனூடாக எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கிவைக்கும் என்றும் எதிர்பார்க்கின்றேன். அந்நிய மதமாற்றம், பௌத்த தேரர்களுக்கு உள்ள பிரச்சினை, புதிய பரம்பரையை ஏற்படுத்தல், தேசியவாத வேலைத்திட்டம் என பல்வேறு திட்டங்களை எமது கட்சி செய்ய எதிர்பார்க்கின்றது. அவற்றை நாடாளுமன்றத்தின் ஊடாக நாட்டிற்கு அறிவிக்கவும் உத்தேசிக்கப்பட்டிருக்கின்றது”எனத் தெரிவித்தார்.